

தனுஷ்
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கு தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
துபாயில் வாட்ச் விளம்பர நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அங்கிருந்த விருந்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உருவான விதம் மற்றும் உலகளாவிய வெற்றி குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ், “நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட பாடல் தான் ‘ஒய் திஸ் கொலவெறி’. அதில் பணிபுரிந்துவிட்டு அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அதை மறந்துவிட்டோம். ஒரு நாள் ஞாபகம் வந்து மீண்டும் கேட்டோம். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அப்போது இசையமைப்பாளரிடம் “வேடிக்கையானவை மட்டுமே எப்போதும் வேலை செய்கிறது. எனவே இதை முயற்சி செய்து பார்ப்போம்” என்றேன். அந்தப் பாடல் தமிழில் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்த்தேன். ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளேன். உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ்.
ஆனால் அப்பாடல் தமிழில் இல்லை. அது தங்கிலிஷ் மொழியில் இருந்தது. அந்தப் பாடலின் வெற்றியில் இருந்து விலகியே வந்தேன். ஆனால், அது என்னை தொடர்ந்து துரத்தியது. இணையத்தில் வைரல் என்றால் என்ன என்பதை அப்பாடலின் வெற்றி எனக்கு உணர்த்தியது. அது ஒரு வரம் போல உணர்ந்தேன், அதே வேளையில் அது சாபமும் கூட.” என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.