

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கிய மீரா கதிரவன், இப்போது புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேசம் என்டர் டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், அமீர், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், மகிழ் திருமேனி, பாண்டிராஜ், மிஷ்கின், சுசீந்திரன், தயாரிப்பாளர் பி.தேனப்பன், நடிகர் நாசர், தவெக எம்எல்ஏ முஸ்தபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மகிழ் திருமேனி பேசும்போது, “ஹபீபி படத்தைப் பார்த்து விட்டேன். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்துக்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளன. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம்தான் ‘ஹபீபி’.
இதை நண்பர் மீரா கதிரவன் இயக்கி இருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்துக்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாகத் தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்பச் சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கின்றன.
தமிழ் சமூகத்துக்கான படம் இது. ஒரு காலகட்ட வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தி இருக்கிறது. தான் சார்ந்த முடிவுகளைத் தானே எடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு” என்றார்.