

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள திரைப்படம், ‘செய்! செய்யாதே!’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் கலிபோர்னியாவில் வசிக்கும் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இதில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தமிழக முதல்வராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்ஷினி ரெட்டி, பிரதிக் ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம், மவுனிகா ப்ரீத்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா கூறும்போது, ‘‘இப்படம் மருத்துவத் துறையை பற்றிய படம். இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது.
படத்துக்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இதை உருவாக்கியுள்ளேன். தமிழ் சினிமாவில் பலர் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளைத் தந்து நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் ஆசை” என்றார்.