இளையராஜா என்னும் இசை அதிசயம்: அன்னக்கிளி முதல் டோரதி வரை!

இளையராஜா என்னும் இசை அதிசயம்: அன்னக்கிளி முதல் டோரதி வரை!
Updated on: 
2 min read

காலங்​கள் மாறலாம்; தொழில்​நுட்​பங்​கள் மாறலாம்; ரசனைகள் புதி​தாகலாம். ஆனால், உண்​மை​யான இசை ஒரு​போதும் முது​மையடைவ​தில்லை என்​ப​தற்கு இளையராஜாவே வாழும் சாட்சி. ‘அன்னக்கிளி’​யில் தொடங்​கிய அந்த இசைப்​பயணம், இன்று ‘டோரதி’ வரை நீள்​கிறது. இது வெறுமனே திரைப்பட இசையின் வரலாறு அல்ல; பல தலை​முறைத் தமிழர்​களின் வாழ்க்கை வரலாற்​றில் பின்​னப்​பட்​டிருக்​கும் சப்​தசுரச் சரித்​திரம்.

1976-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை - ஐம்​பது ஆண்​டு​கள்! தமிழ் மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யில் மகிழ்ச்​சி​யில் மெல்லிசை​யாக​வும் காதலில் கவிதை​யாக​வும் பிரி​வில் கண்ணீராகவும், தனிமை​யில் துணை​யாக​வும் ஒலித்​துக்​கொண்டிருக்​கும் இசைப் பேரரசின் பெயர், இசைஞானி இளையராஜா!

16 வயதில் தொடங்​கிய இசை மயக்​கம்!

1976-ல் ‘அன்​னக்​கிளி’ வெளி​யான​போது எனக்கு வயது 16. புதி​தாகக் கேட்​ப​தை​யும் பார்ப்​ப​தை​யும் ஆர்​வத்​துடன் உள்​வாங்​கிக்​கொள்​ளத் துடித்த இளமைப் பரு​வம் அது. எனது டியூஷன் ஆசிரியர் பழனியப்​பன், ஓர் இசை ரசிகர். கிட்​டார், புல்​புல் தாரா போன்ற கருவி​களை வாசிக்​கத் தெரிந்​தவர். ஒவ்​வொரு நாளும் டியூஷன் முடிந்​ததும் ஏதாவது ஒரு திரைப்​படப் பாடலை வாசித்து எங்​களை மகிழ்​விப்​பார்.

ஆனால், ‘அன்​னக்​கிளி’ வெளி​யானதும் ஒரு வியப்​பான மாற்​றம். ஏறக்​குறைய ஒரு மாத காலம் தின​மும் அப்​படத்​தின் பாடல்​களை வாசித்து மகிழ்​வித்​தார். இளை​ய​ராஜா​வின் இசை​யில் பயன்​படுத்​தப்​பட்ட கிட்​டார், தாளக் கருவி​கள், நாட்​டுப்​புற இசை​யின் தனித்​து​வம் என ஒவ்​வொரு நுட்​பத்​தை​யும் உணர்ச்​சி​யுடன் விளக்​கு​வார். அது டியூஷன் வகுப்​பா, இசைக் கல்​லூரியா என்று வியக்​கும் அளவுக்கு அமைந்​தது. அப்​படித்​தான், என் காதுகளின் வழி​யாக இளை​ய​ராஜா என் மனதுக்​குள் நுழைந்​தார். அன்று ஆசிரியர் விதைத்த இசை விதை, 50 ஆண்​டு​களுக்​குப் பின்​னரும் பசுமை குன்​றாமல் வளர்​கிறது.

1978 - ப்ரி​யா: மறக்க முடி​யாத இசை அனுபவம்!

படிப்​பில் வகுப்​பு​கள் உயர்ந்​த​போது, இசையைக் கேட்​கும் ரசனை​யும் வளர்ந்​தது. ராகங்​கள், இசைக்​கோர்​வை​கள், குரல் வளம், வாத்தியங்​கள் எனப் பல பரி​மாணங்​களை உணரத் தொடங்​கினேன். 1978-ல் வெளி​யான ‘ப்​ரி​யா’ திரைப்​படம் என் இசை அனுபவத்​தில் மறக்க முடி​யாத அத்​தி​யா​யம். ஸ்டீரியோஃ​போனிக் ஒலிப்​ப​தி​வின் புதிய அனுபவ​மும் INRECO வெளி​யிட்ட இசைத்​தட்​டு​களும் என்​னைப் பெரிதும் ஈர்த்​தன.

வீட்​டில் ரெக்​கார்ட் பிளேயர் வாங்க வேண்​டும் என்று என் தந்​தையை வற்​புறுத்​தினேன். முதல் இசைத்​தட்​டாக ‘ப்ரி​யா​’வையே வாங்​கினேன். பள்​ளித் தோழர்​களை வீட்​டுக்கு அழைத்​து, அந்​தப் பாடல்​களைத் திரும்​பத் திரும்​பக் கேட்டு மகிழ்ந்​தோம். இசைத்​தட்டு தேயும்​வரை கேட்ட அந்த நாட்​கள் இன்​றும் மனதில் இளமை​யாக இருக்​கின்​றன!

80-கள் இசை ராஜா​வின் பொற்​காலம்

80-களில் நேஷனல், பானாசோனிக் டேப் ரெக்​கார்​டர்​களின் வரு​கை​யுடன் இசைத்​தட்​டு​களி​லிருந்து கேசட்​டு​களுக்கு மாறிய காலம். சிங்​கப்​பூரிலிருந்து நண்​பர்​கள் மூலம் டேப் ரெக்​கார்​டர் வாங்​கிய நினை​வும் இன்​றும் பசுமை​யாக உள்​ளது. தொழில்​நுட்​பம் வளர்ந்​தது; ஒலிப்​ப​தி​வின் தரம் உயர்ந்​தது. மேற்​கத்​திய இசைக்​கோர்​வை​களை​யும் கிராமிய மண்​வாசனையையும் இணைத்​து, வயலின்​களின் சங்​கமத்​தி​லும் கிட்​டாரின் துள்​ளலிலும் புதிய இசை உலகத்தை உரு​வாக்​கி​னார் இளை​ய​ராஜா.

வீடு​கள், பேருந்​துகள், தேநீர்க்கடைகள், திருமண விழாக்​கள் எனத் தமிழகத்தின் அன்​றாட வாழ்​வில் அவரது இசை கோலோச்​சி​யது. காதல், நட்​பு, கனவு​கள், ஏக்​கங்​கள் என எங்​கள் இளமை உணர்​வு​களுக்கு அவரது பாடல்​கள் வடி​காலாக அமைந்​தன. 80-கள் என்​பது ஒரு தசாப்​தம் மட்​டுமல்ல; இளை​ய​ராஜா என்ற இசைச் சக்​கர​வர்த்​தி​யின் பொற்​காலம்.

1992 - புதிய இசை அலை; தொடர்ந்த ராஜா​வின் தனித்​து​வம்!

ஏ.ஆர்​.ரஹ்​மானின் வருகை தமிழ்த் திரைப்பட இசை​யில் புதிய அத்​தி​யா​யத்​தைத் திறந்​தது. நவீன ஒலியமைப்​பு​களும் புதிய தொழில்​நுட்​பங்​களும் இசை உலகை மாற்​றின. ஆனாலும், இளை​ய​ராஜா​வின் இடம் குறைய​வில்​லை. தேவர் மகன், ஹே ராம், விரு​மாண்​டி, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்​படங்​கள், காலத்​திற்​கேற்ப வெவ்​வேறு பரி​மாணங்​களில் அவரது இசைத் திறன் தொடர்ந்​ததற்குச் சான்​றுகள்.

புதிய இசையமைப்​பாளர்​கள் வந்​தார்​கள்; ரசனை​கள் மாறின. ஆனால், இளை​ய​ராஜா​வின் இசையோடு வளர்ந்த தலை​முறை​யின் பிணைப்பு மட்​டும் தொடர்ந்​தது. அவர் காலத்​துடன் போட்​டி​யிட்​ட​வர் அல்ல; காலத்​தைக் கடந்து நிற்​கும் இசையை உரு​வாக்​கிய​வர்! ‘டோர​தி’ - மீண்​டும் அந்த 80-களின் மாயம்! 2026-ல், ‘அன்​னக்​கிளி’ அறி​முக​மாகி 50 ஆண்​டு​கள் நிறைவடை​யும் வேளை​யில், ‘டோர​தி’​யின் இசை மீண்​டும் என்னை 80-களுக்கு அழைத்​துச் சென்​றது. இளமைக்​காலத்​தில் ஏற்​பட்ட அதே பரவசத்தை இன்​றும் உணர முடிவது இசை​யின் அதிசயமல்​ல​வா? ஒரு பாடல் மறந்​து​போன முகங்​களை நினை​வுபடுத்​துகிறது; தொலைந்​து​போன காலங்​களை மீட்​டெடுக்​கிறது.

நம்​மோடு இல்​லாதவர்​களைக்​கூட இசை​யின் வழி​யாக மீண்டும் அரு​கில் கொண்​டு​வந்து நிறுத்​துகிறது. 50 ஆண்​டு​கள் இசையமைப்​பது சாதனை; 50 ஆண்​டு​களாக ஒரு சமூகத்​தின் உணர்​வு​களில் வாழ்​வது அதை​விடப் பெரிய சாதனை!

எனது 16 வயதில் பழனியப்​பன் ஆசிரியரின் இசை​யின் வழி​யாக மனதில் பதிந்த இளை​ய​ராஜா, இன்று என் வாழ்க்​கை​யின் 50 ஆண்​டு​கால நினை​வு​களோடு இணைந்​திருக்​கிறார். ஒரு தமிழ​னாக அவரது இசைப் பயணத்தை நினைத்து பெரு​மிதம் கொள்​கிறேன். இசைஞானியே, அன்​னக்​கிளி​யில் தொடங்​கிய உங்​கள் இசைப் பயணம் நூறு ஆண்​டு​களை​யும்​ தாண்​டி வெற்​றிநடை போடட்​டும்​!

இளையராஜா என்னும் இசை அதிசயம்: அன்னக்கிளி முதல் டோரதி வரை!
Dorothy: சாதி, ஆண் திமிர் வளர்த்த பாலின பாகுபாட்டை தகர்த்த டோரதி | திரை தேவதைகள் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in