

பிரபலங்களில் பெயரில் நடக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், நடிகை அதிதி ராவ் ஹைதாரி, தன் பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கை உருவாக்கி, புகைப்படக் கலைஞர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்றவர்கள் பற்றி எச்சரிக்கை செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கைத் தொடங்கி மர்மநபர்கள் சிலர் ஏமாற்றி வருவதாக அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில், செல்போன் எண்ணுடன் கூடிய ஸ்கிரீன் ஷாட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “யாரோ ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்ய முயல்வதாக நண்பர்களிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. இது யார் என்று தெரியவில்லை. இது என்னுடைய எண்ணும் இல்லை. இந்த போலி எண்ணிலிருந்து விலகி இருங்கள்.
துரதிர்ஷ்டவசமான விஷயம் என்ன வென்றால் அந்த போலி நபர், நான் போற்றும் நபர்களிடமும் நான் பணியாற்ற விரும்புவர்களையும் தொடர்பு கொண்டிருக்கிறார். இதுபோன்ற மோசடி வேலைகளைச் செய்து ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? ஆள்மாறாட்ட வேலையில்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையை வாழுங்கள்” என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.