

திரைப்பட படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் செப். 1 முதல் நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
‘செப். 1 முதல் வெளியாகும் திரைப்படங்களை, 8 வாரம் கழித்துத் தான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்த படங்களைத் திரையிட அனுமதிக்க முடியும்’ என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து செப். 1 முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்தது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் போது, அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல; தினசரி வேலைவாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படுகிறது.
திரைப்படத் தொழில் என்பது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது அல்ல. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்தத் துறையுடன் இணைந்துள்ளது.
எனவே, தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள, செப். 1 முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பெப்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினையில் அரசு உடனடியாகத் தலையிட்டு, தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து, அரசின் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தற்போது சினிமாவில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பற்றி பேசி முடிவு எடுத்து விட்டால், திரைப்படத் துறை இன்னும் வேகமாக செயல்பட அது உதவும்.
திரைப்படத் துறையைப் பற்றியும், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றியும் நன்கு அறிந்த தற்போதைய முதல்வர் விஜய், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும், திரைப்படப் பணிகள் நிறுத்தப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.