

மிஷ்கின் இயக்கி இசை அமைத்துள்ள படம், ‘டிரெயின்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, பாரத்திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மிஷ்கின் பேசும்போது, “என்னுடைய ‘நந்தலாலா’ படக் கதையைச் சொல்வதற்காகத் தயாரிப்பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்றுமே புரியவில்லை. பிறகு எவ்வளவு பட்ஜெட் என்று கேட்டார். ரூ.4 கோடி என்றேன். அவர் ஒரு ரூ.60 கோடியில் படம் பண்ணலாம் என்றார். ‘இந்தப் படத்துக்கு அவ்வளவு தேவை இருக்காது; இது சாதாரண கதை’ என்றேன். அந்தக் கதை விக்ரமுக்கு பிடித்திருந்தது. ஆனால் பண்ண முடியவில்லை.
ஆனாலும் தாணு சார் அப்போது எனக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்குப் பிறகு தாணு சாரை சந்தித்து படம் பண்ணலாம் என்றேன். விஜய் சேதுபதியை வைத்துப் பண்ணலாம் என்றார். விஜய் சேதுபதி என்னுடன் ஒரு படத்தில் 2 நாட்கள் நடித்தார். பிறகு 10 வருடத்துக்குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்கவில்லை. பிறகு அவர் பெரிய நடிகராக வளர்ந்து விட்டார். என்னுடைய ‘சைக்கோ’ படம் பாத்துவிட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன்.
இந்தக் கதையை விஜய் சேதுபதிக்காகப் பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையில், வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருக்கிற கதாபாத்திரம் அவருக்கு. இந்தப் படத்தை விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடியாது. கமல் சார் கூட பண்ணியிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவரவில்லை. படம் நன்றாக இருந்தால்தான் ஓடும் என்பது தெரியும். விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.