

கஸ்தூரி ராஜா, இயக்குநர் மீரா கதிரவன்
மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘ஹபீபி’. நேசம் என்டர்டெயின்மென்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக் ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தமிழ், சித்த மருத்துவர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் கஸ்தூரி ராஜா பேசும்போது, "இந்தப் படத்தை தனுஷ் பார்த்துவிட்டு கவுரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள் என்றார். இந்தப் பெயரை வாங்கித் தந்த மீரா கதிரவனுக்கு நன்றி. இந்த படமும் யூசுப் கதாபாத்திரமும் எனக்கு இன்னொரு பிறவி. இஸ்லாமியராக நான் நிஜத்திலும் மாறிவிட்டேனோ என எனக்குத் தோன்றும். இயக்குநராக கஸ்தூரி ராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்கலாமோ எனவும் தோன்றும்” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, "110 வருட தமிழ் சினிமாவில் இது என்னுடைய முதல் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்துக்குப் பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்தப் படத்தைத் தோளில் தூக்கிச் சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது. எல்லா நல்ல படங்களுக்கும் அவர் இப்படிச் செய்வார். இஸ்லாமியர்களைத் தீவிர வாதிகளாகச் சித்தரித்ததில் திரைத்துறைக்கு பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் முன்வர வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்தப் படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்" என்றார்.