“குடி உள்ள போனா குடும்பம் வெளிய போயிடும்!” - ‘ஆகாயம்’ பற்றி ‘தினந்தோறும்’ நாகராஜ்

“குடி உள்ள போனா குடும்பம் வெளிய போயிடும்!” - ‘ஆகாயம்’ பற்றி ‘தினந்தோறும்’ நாகராஜ்
Updated on
2 min read

“ஒரு பெரும் அன்பை, பேரன்பைச் சொல்ல வரும் படம்தான் ‘ஆகாயம்’. அன்புக்கு முன்னால இங்க எதுவுமே இல்லை. அளவில்லா அன்பைச் சொல்ற கதைங்கறதாலதான் ‘ஆகாயம்’னு தலைப்பு வச்சோம்” என்று ஆரம்பிக்கிறார் இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்னர். படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ரிலீஸ் வேலைகளில் இருந்த ‘தினந்தோறும்’ நாகராஜிடம் பேசினோம்.

‘ஆகாயம்’ அன்பை மட்டும் பேசற படமா ?: இல்லை. ஆதார் கார்டு, ஐடி கார்டு, பேன் கார்டு, கிரெடிட் கார்டு, ரேஷன் கார்டுனு எந்த கார்டும் இல்லாத நாயகன் குட்டி, செத்துப்போனா சுடு காடுன்னு வாழற கேரக்டர். பொய் சொல்லத் தெரியாத, நேர்மையான அவன், மது பழக்கத்துக்கு அடிமையாகறான். அவனுக்கு காதல் வருது. ‘மது பழக்கத்தால நமக்கு நம்ம கையே உதறுது, எதுக்கு இன்னொரு கையா கல்யாணம்?’னு நினைக்கிற ஆள் அவன். அவன் வாழ்க்கை யில சந்திக்கக்கூடிய விஷயங்கள்தான் படம். லைனா இப்படி இருந்தாலும் திரைக்கதை எல்லோரும் பிடிக்கும் விதமா இருக்கும். சென்னையில ஒரு பகுதியில நடக்கக் கூடிய கதை.

உண்மைச் சம்பவக் கதையா?

என் வாழ்க்கையில இருந்து எடுத்த ஒரு சின்ன விஷயத்தை, கொஞ்சம் சமூகத்தோட கனெக்ட் பண்ணி உருவாக்கி இருக்கோம். இது அரசியலும் பேசுற படம். ஒரு மனிதன் சரியா இருக்கும்போது, வாழ்க்கையில நிறைய விஷயங்கள் கிடைச்சிருக்கலாம். குடி அவன் வாழ்க்கையில வந்த பிறகு அவன் எதையெல்லாம் இழக்கிறான், அப்புறம் அவன் வாழ்க்கையில அவனுக்கு கிடைச்சது என்ன அப்படின்னு திரைக்கதை போகும்.

அதாவது ‘டாஸ்மாக்ல குடிச்சிட்டு வீட்டுக்கு போனாலும் சரி, ஸ்டார் ஹோட்டல்ல குடிச்சிட்டு வீட்டுக்குப் போனாலும் சரி, குடி உள்ள போனா, குடும்பம் வெளிய போயிடும்’. நிறைய பேர் வாழ்க்கையில இதுதான் நடந்திருக்கு. அதான் கதை. இந்தப் படத்துல அழகான காதல் இருக்கு, உறவுகள் இருக்கு. கதையில யாருக்கும் யாருமே சொந்தம் கிடையாது, ஆனா எல்லாருமே சொந்தக்காரங்களா ஆயிடுறாங்க.

முதன்மை கதாபாத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சிக் கொடுத்தீங்களாமே?

எல்லாருக்கும் இல்லை. குட்டி கதாபாத்திரத்துல ‘கன்னிமாடம்’ ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவா நடிச்சிருக்கார். நாயகியா ஆலிஷான்னு நடிச்சிருக்காங்க. ஹீரோவோட நண்பனா, சின்னத்திரை தொடர்கள்ல நடிக்கிற ஸ்ரீதேவான்னு சிலருக்கு மட்டும் முதல்லயே ஸ்கிரிப்டை கொடுத்து, மாடுலேஷன்ல இருந்து எல்லாத்தையும் சொல்லி பயிற்சிக் கொடுத்தோம். அந்தந்த கதாபாத்திரமா அவங்க வாழறதுக்கு அது உதவுச்சு. சினிமாவுல உங்களுக்கு பெரிய அனுபவம் இருக்கு... பெரிய ஹீரோக்கள் பலரை தெரியும். அவங்களை வச்சு

ஏன் படம் பண்ண முயற்சிக்கலை?

நான் ‘தினந்தோறும்’ முடிச்சதுமே எல்லா ஹீரோக்களும் என் படத்துல நடிக்கிறதுக்கு வந்தாங்க. இப்ப சில வருடங்களுக்கு முன்னால கூட சூர்யா சாரை சந்திச்சிருக்கேன். அஜித் சார் ஒரு வாட்டி கூப்பிட்டுப் பேசியிருக்கார். என்கிட்ட இருந்த ஒரு பழக்கத்தால, அவங்களை வச்சு படம் பண்ற தகுதி எனக்கு இல்லைன்னு நானா விலகினேன். எனக்கு அதுக்கான ஒழுக்கம் அப்ப இல்லை; பிறகெப்படி அவங்களை வச்சு படம் பண்றது?

இன்னைக்கு நான் சரியா இருக்கிறேன். யாரை வச்சும் படம் பண்றதுக்கு நிறைய கதவுகள் திறந்திருக்கு. இந்தப் படமும் எனக்கு அப்படியொரு வாய்ப்பைக் கொடுக்கும். அதோட எனக்கு பெரிய நடிகர்களை வச்சுதான் படம் பண்ணணுங்கறது கிடையாது. நல்ல படங்கள், ஆனா ஓடுற படங்கள் பண்ணணும்ங்கறதுதான் ஆசை.

கதையில குடிக்கு எதிரான மெசேஜ் சொல்றீங்களா?

இது யதார்த்தமான படம். ரொம்ப நெருக்கமான படமா இருக்கும். சினிமா பார்க்குற ஃபீலிங் இல்லாம, யாரோ ஒருத்தர் வாழ்க்கையில நடக்கறதை ஓரமா நின்னு ஒளிஞ்சு வேடிக்கை பார்க்குற மாதிரியான படமா இருக்கும். கதையில வர்ற எல்லோருமே நெருக்கமான மனிதர்களா இருப்பாங்க. நம்ம தினமும் சந்திக்கக்கூடிய மனிதர்கள் தான். ‘குடி வேண்டாம்’ங்கறதுதான் கதை. அதை மெசேஜா சொல்லலை. அப்படி எடுத்துக்கிறவங்க எடுத்துக்கலாம்.

‘மத்தாப்பு’க்கு பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

நான் ஏற்கெனவே நிறைய கேப் விட்டுதான் அடுத்தடுத்த படங்கள் பண்ணினேன். எப்படியாவது ஒரு சினிமா பண்ணிடலாம்னு நான் நினைக்கவே இல்லை. இப்படித்தான் பண்ணணுங்கறதுல தெளிவா இருந்தேன். இப்ப ஒரு தயாரிப்பாளர் படம் பண்ணலாம்னு வருவார்; எல்லாம் ஓகே ஆகும். முதன்மை பாத்திரத்துல நடிக்கிறதுக்கு வளர்ந்து வர்ற ஒரு நடிகர் வேணும்னு பேசுவோம். உடனே திடீர்னு என் பையனை வச்சு பண்ணலாம்னு தயாரிப்பாளர் சொல்வார்.

இல்லைனா, என் தம்பி இருக்கான், எனக்கு வேண்டிய உறவினர் பொண்ணு இருக்கு, அவங்களை ஹீரோ, ஹீரோயினா அறிமுகப்படுத்துங்க’னு வருவாங்க, கதையில சமரசம் பண்ணச் சொல்வாங்க. புதுமுகங்களை வச்சு பண்ணக்கூடாதுன்னு நினைக்கலை. அதுக்கான தகுதியோட அவங்க வரலை. மெனக்கெடுதல் இல்லை. அதனால அப்படியே ஒவ்வொன்னா தவிர்த்ததால இடைவெளி விழுந்துருச்சு. இனி இடைவெளி இருக்காது.

“குடி உள்ள போனா குடும்பம் வெளிய போயிடும்!” - ‘ஆகாயம்’ பற்றி ‘தினந்தோறும்’ நாகராஜ்
Balan: The Boy - இந்து, மேரி, ஃபர்ஸானா... இன்னும் சில விக்டிம்கள் | திரை தேவதைகள் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in