“அந்த சிறுவன் கண்ட கனவு” - ‘ரஜினி 173’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நெகிழ்ச்சி

Director Cibi Chakravarthi

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

Updated on
1 min read

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவின் விவரம்: “ஒரு சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவனது பெரிய கனவு என்றாவது ஒரு நாள் ‘சூப்பர் ஸ்டாரை’ நேரில் கண்டு அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த விருப்பமே அவனை சினிமா நோக்கி செலுத்தியது. அந்த உந்துதலால் அவனது கனவு ஒரு நாள் நிறைவேறியது.

ஆனால், அவனது ஆசைகள் அந்த புகைப்படக் கனவோடு நிற்கவில்லை. தனது ஆதர்ச நடிகரை; சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை துளிர்க்கச் செய்தது. ஒருநாள் அதற்கு மிக நெருக்கத்தில் வந்த அவன், அந்த வாய்ப்பை இழந்தான்.

இருந்தாலும், அவன் மனம் தளரவில்லை. என்றேனும் அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்பினான். அந்த நாள் இந்த நாள்தான். ‘தலைவர் 173’ நாள்.

தலைவர் சொல்லிய வார்த்தைகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றன. ‘கனவுகள் மெய்ப்படும்’; ‘அற்புதங்கள் நிகழும்’ என்று தலைவர் சொல்வார்!

சில நேரங்களில் வாழ்க்கை நம் கனவுகளுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. நம் கனவுகளைக் காட்டிலும் மிகப்பெரியது நடைபெறுகிறது. அப்படித்தான் சூப்பர் ஸ்டார் படத்துக்கு உலகநாயகன் கமல், மகேந்திரன் ஆகியோர் தயாரிப்பாளர்களாக அமைந்துள்ளனர். அதற்காக நன்றியுடன் இருப்பேன்.

நீங்கள் எல்லோரும் என் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற எனது இதயத்தையும், ஆன்மாவையும் செலுத்தி உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை 11 மணியளவில், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ரஜினி 173 படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர்தான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கவர்.

Director Cibi Chakravarthi
‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in