6 வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி

வாபஸ் பெற்றதால் உயர் நீதிமன்றம் உத்தரவு
6 வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான 6 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாபஸ் பெற்றதை அடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-2010 காலகட்டங்களில் 6 நிதி ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாததாக நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை 6 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது வருமான வரித் துறை தரப்பில், ‘இந்த 6 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 2022-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதே காரணங்களைக் கூறி தற்போது இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “6 வழக்குகளையும் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும். இதில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுக்களை ஏற்க இயலாது” என்று தெரிவித்தார். இதனால், 6 மனுக்களையும் திரும்பப் பெறுவதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

6 வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுக்கள் தள்ளுபடி
தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in