
விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான, தென்மேற்கு பருவக்காற்று, மதயானைக் கூட்டம், நீர்ப்பறவை, அயோத்தி, போகுமிடம் வெகுதூரமில்லை உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் என்.ஆர்.ரகுநந்தன். வார்த்தைகளை மூழ்கடிக்காத மென் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர், பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து வரும் அவர், “தமிழ் சினிமாவில் பாடகர்களுக்குப் பஞ்சம் இருக்கிறது” என்கிற கவலையை வெளிப்படுத்துகிறார்.
எப்படி? சூப்பர் சிங்கர் மாதிரியான இசை நிகழ்ச்சிகள்ல இருந்து நிறைய பாடகர்கள் திறமையாகவே வர்றாங்கன்னு சொல்றாங்களே...
அவங்க எல்லாரும் நல்லா பாடுறாங்க. ஆனா, சினிமா பாடல்களை மட்டுமே அவங்க பாடக்கூடாது. அந்தப் பாடல்களை ஏற்கெனவே வேறொரு பாடகர் பாடியிருப்பார், அதையே பாடும்போது அந்த பாடகர்தான் நம்ம ஞாபகத்துக்கு வருவார். எஸ்.பி.பி சார் பாடலோ, சுசீலாம்மா பாடலையோ பாடினா, அவங்கதானே ஞாபகத்துல வர்றாங்க, பாடற இவங்க வரமாட்டாங்க.
அதனால இவங்க தங்களோட தனித்திறமையை வளர்த்துக்கணும். ஒரு புது டியூனை கொடுத்தா, அதை எப்படி ‘இம்ப்ரவைஸ்’ பண்ணிப் பாடணுங்கற திறமை இருந்தாதான் சினிமாவுல நிலைக்க முடியும். அப்படி இல்லைனா, புது பாடகர் கிடைக்கமாட்டாங்க. என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவுல இப்போ பாடகர்களுக்கு கடுமையான பஞ்சம்னே சொல்லுவேன்.
ஆச்சரியமா இருக்கே?
ஆச்சரியப்பட என்ன இருக்கு? அந்தக் காலத்துல டி.எம்.எஸ், பி.சுசீலா, ஜிக்கி, ஜமுனா ராணி, பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏஎம்.ராஜான்னு நிறைய பாடகர்கள் இருந்தாங்க. அடுத்து எஸ்.பி.பி, யேசுதாஸ், வாணி ஜெயராம், ஷைலஜா, எஸ்.என்.சுரேந்தர், மலேசியா வாசுதேவன்னு ஒரு பெரிய டீம் உருவாச்சு.
அடுத்தக் காலக்கட்டத்துல மனோ, சுஜாதா, ஸ்வர்ணலதா, ஹரிஹரன், சங்கர் மகாதேவன் என நிறைய பேர் இருந்தாங்க பிறகு சின்மயி, ஹரிச்சரண், கார்த்திக், ஸ்வேதா மோகன், சைந்தவி மாதிரி சிலர் இருக்காங்க. இவங்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறை பாடகர்கள்னு யாரும் உருவாகலையே. இதுதான் உண்மை. தமிழ் சினிமாவுல பாடகர்களுக்கு பெரிய பஞ்சமிருக்கு. அதனாலதான் மற்ற மொழிகள்ல பாடகரை தேடிப் பிடிச்சு பாட வைக்கிறோம்.
இன்னைக்கு புதிய இசை அமைப்பாளர்கள் அதிகமா வர்றாங்க. இதனால போட்டி கடுமையா இருக்குன்னு நினைக்கிறீங்களா?
அது ஆரோக்கியமான போட்டிதான். போட்டி இருந்தாதான் கடினமா உழைக்கணுங்கற எண்ணம் வரும். அதை போட்டின்னும் சொல்ல முடியாது. இன்றைய இளம் இசை அமைப்பாளர் களோட சேர்ந்து பயணிக்கறதை, சிறப்பான பயணம்னுதான் சொல்ல முடியும்.
இன்றைய காலகட்டத்துல திறமையும் கடுமையான உழைப்பும் இருந்தா மட்டுமே சினிமாவுல நிலையான இடம் கிடைக்கும். யாருடைய இசை, பாடல் ஹிட்டாகுதோ, அவங்கதான் முன்னணிக்குச் செல்ல முடியும். அவங்களுக்கான அங்கீகாரம் கிடைச்சுட்டுதான் இருக்கு. அதனால இளம் இசை அமைப்பாளர்கள் அதிகம் வர்றதை ஆரோக்கியமானதுன்னு சொல்லலாம்.
‘ரெடிமேட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ காரணமாகத்தான் இசை அமைப்பாளர்கள் அதிகமா வர்றாங்களா?
ஒரு லேப்டாப், கீ போர்டு இருந்தா போதும், யார் வேணும்னாலும் புரோக்கிராம் பண்ணலாம். ஆனா, ‘கிரியேஷன்’ வேறதானே. அந்த இசை அறிவு இருந்தாதான் நிலைக்க முடியும். அதுதான் வெற்றிபெறும். கையில கம்பு வச்சிருக்கிற எல்லோருமே சிலம்பம் ஆட முடியாதுல்ல. மக்களுக்குப் பிடிக்கிற பாடல்களைக் கொடுக்கிறவங்கதான் வெற்றி பெற முடியும்.
இப்ப வர்ற சினிமா பாடல்கள் ‘ஃபாஸ்ட் பீட்’டுக்கு மாறிடுச்சுன்னும் மெலடி குறைஞ்சிடுச்சுன்னும் பேச்சு இருக்கே?
காலத்துக்கு ஏற்ப இசை மாறிட்டே இருக்கும். இப்பவும் மெலடி இருக்கு. அது எப்படி இருக்குன்னா, உலக அளவுல இசைக் கலைஞர்கள் எப்படி பண்றாங்க அப்படிங்கறதை பொறுத்து மாறிட்டே இருக்கு. அந்தப் பாடல்களை கேட்டு, அது மாதிரி ஒரு பாடலை பண்ணணும்னு இங்கயும் பண்றாங்க. அப்ப இசை மாறத்தான் செய்யும். ரசனை மாறும்போது, இசையும் மாறித்தானே ஆகணும். இன்றைய காலம் ரொம்ப வேகமானது. எல்லோரும் நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்காங்க.
அவங்களுக்கு ஏற்ப இசையும் பாடல்களும் மாறுவதுதானே முறை. ஆரம்ப கால சினிமாவுல கூத்து ஸ்டைலில் பாடல்கள் இருக்கும். பிறகு பாகவதர் காலத்துல கிளாசிக்கல் பாடல்கள் வந்தன. சி.ஆர்.சுப்பராமன் காலத்துல ஸ்டைல் கொஞ்சம் மாறிச்சு. கேவி.மகாதேவன் கிளாசிக்கல் மற்றும் மெல்லிசையை சேர்த்துக்கொடுத்தார். அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதன் ஜாஸ், ராக் இசையை மிக்ஸ் பண்ணினார்.
அதுல இருந்து மொத்தமா மாறுபட்டு மண்சார்ந்த இசையை சினிமாவுக்குக் கொண்டு வந்தார் இளையராஜா. கிராமத்து நாட்டுப் புறப்பாடலை வெஸ்டர்ன் கிளாசிக்கல்ல மிக்ஸ் பண்ணினா எப்படி இருக்கும்ங்கறதை அவர் காண்பிச்சார். அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் வெஸ்டர்னை இன்னொரு முறையில தமிழ் திரையிசையில பயன்படுத்தினார். இந்த மாற்றத்துக்கு பிறகு இன்னொரு டிரெண்ட் செட்டர் வருமான்னு தெரியல. வராதுன்னுதான் நினைக்கிறேன்.
இப்போ என்னென்ன படங்களுக்கு இசை அமைக்கிறீங்க?
யோகி பாபு கதை நாயகனாக நடிக்கும் படம், ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவியாளர் பகவான் கிருஷ்ணா இயக்கும் ‘விழா நாயகன்’, அறிமுக இயக்குநர் சரவணகுமார் இயக்கும் படம்னு சில படங்களுக்கு இசை அமைக்கிறேன்.