

‘சர்தார் உத்தம்’ படத்தில்...
திரைப்படத் தயாரிப்பு முறைகளுக்கும் ஒளிப்பதிவுக்கும் இடையிலான உறவைப் பேசும்போது, பட்ஜெட் என்பது செலவு கணக்கு மட்டுமல்ல. ஒரு திரைப்படத்தின் காட்சிமொழி, படப்பிடிப்பின் சுதந்திரம், தொழில்நுட்ப வசதிகள், ஒளிப்பதிவாளரின் படைப்பாற்றல் ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணி அது.
ஹாலிவுட்டின் ஸ்டூடியோ முறை முதல் இந்தியாவின் குறைந்த செலவிலான சுயாதீனத் திரைப்படங்கள், பிரம்மாண்டமான நட்சத்திரப் படங்கள், ஓடிடி ஒரிஜினல்கள் வரை ஒவ்வொரு தயாரிப்பு முறையும் ஒளிப்பதிவாளருக்கு வெவ்வேறு வாய்ப்புகளையும் சவால்களையும் வழங்குகின்றன.
ஹாலிவுட் ஸ்டூடியோ முறையும் சுயாதீனத் திரைப்படங்களும்
ஹாலிவுட்டில் பெரிய ஸ்டூடியோக்கள் தயாரிக்கும் திரைப்படங்கள், திட்டமிடல், நிதி மேலாண்மை, தொழில்நுட்ப வசதிகள், கலை இயக்கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக் ஷன் ஆகியவற்றில் விரிவான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. பல துறைகளுக்குத் தனித்தனியான நிபுணர்கள் பணியமர்த்தப்படுவதால், ஒளிப்பதிவாளர் தனது காட்சிப்பார்வையில் அதிக கவனம் செலுத்த முடியும். அதே நேரத்தில், தயாரிப்பு அட்டவணை, ஸ்டூடியோ நடைமுறைகள் மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடுகளுக்குள் பணியாற்ற வேண்டியிருக்கும்.
இதற்கு மாறாக, சுயாதீனத் திரைப்படங்களில் நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், கதைக்குத் தேவையான காட்சி மொழியைச் சோதித்துப் பார்க்கவும், வழக்கமான வணிக சினிமாவின் விதிமுறைகளைத் தாண்டிச் செல்லவும் வாய்ப்புகள் அதிகம். இங்கு ஒளிப்பதிவாளரின் அனுபவமும் படைப்பாற்றலும் மிக முக்கியமானதாகின்றன.
இந்தியத் திரைப்படத் தயாரிப்பின் 3 நிலைகள்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பை அதன் பொருளாதாரக் கட்டமைப்பின் அடிப்படையில், பொதுவாகக் குறைந்த பட்ஜெட், நடுத்தர பட்ஜெட், அதிக பட்ஜெட் என மூன்று பிரிவுகளாகப் புரிந்துகொள்ளலாம். இவற்றுக்கென நாடு முழுவதும் பொருந்தக்கூடிய நிலையான நிதி வரம்புகள் இல்லை. திரைப்படத்தின் மொழி, சந்தை, நட்சத்திரங்களின் ஊதியம், படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான செலவுகள், விஷுவல் எஃபெக்ட்ஸ், படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் தயாரிப்பின் ஒட்டுமொத்த அளவு ஆகியவற்றைப் பொறுத்து பட்ஜெட் வகைப்பாடு மாறுபடுகிறது.
குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள்
குறைந்த எண்ணிக்கையிலான படப்பிடிப்புத் தளங்கள், இயற்கையான ஒளி, சிறிய கேமரா குழு, கிடைக்கும் இடங்களின் இயல்பான அழகைப் பயன்படுத்துதல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இங்கு ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனியாகப் பெரிய ஒளியமைப்புகளை உருவாக்க முடியாமல் போகலாம். அதற்குப் பதிலாக, ஜன்னல் வழியாக வரும் ஒளி, தெரு விளக்குகள், நிழல்கள், இயற்கையான வண்ணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் காட்சியின் உணர்வை உருவாக்க வேண்டும்.
நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள்
இங்கு கேமரா, லென்ஸ், லைட்டிங் மற்றும் கிரிப் உபகரணங்களில் சிறந்த தேர்வுகளைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கலை இயக்கம், படப்பிடிப்புத் தள வடிவமைப்பு, கலர் கிரேடிங் மற்றும் தேவையான அளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றையும் திட்டமிட முடியும். கலைநோக்கையும் தயாரிப்புச் செலவையும் சமநிலைப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளரின் முக்கியப் பணி.
அதிக பட்ஜெட் திரைப்படங்கள்
பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், பல கேமரா அமைப்புகள், விரிவான ஒளியமைப்புகள், கிரேன், டாலி இயக்கங்கள், வெளிநாட்டுப் படப்பிடிப்புகள், விரிவான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நீண்ட பின் தயாரிப்புப் பணிகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அதிக வளங்கள் இருப்பதால் மட்டுமே சிறந்த ஒளிப்பதிவு உருவாகிவிடாது. கிடைக்கும் வளங்களை எவ்வாறு கலைநயத்துடனும் படைப்பாற்றலுடனும் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
குறைந்த பட்ஜெட்
சவால்களில் மலரும் படைப்பாற்றல் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில், ஒளிப்பதிவாளரின் உண்மையான திறமை வெளிப்படுவது, கிடைக்கும் வளங்களின் வரம்புகளுக்குள் காட்சியின் அழகியலையும் தரத்தையும் தக்கவைத்துக்கொள்வதில்தான். கூடுதல் படப்பிடிப்பு நாட்கள் இல்லாமை, விரும்பிய லொக்கேஷன்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகள், பெரிய ஒளியமைப்புகளை உருவாக்குவதற்கான நேரம் மற்றும் நிதிப் பற்றாக்குறை என பல சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இத்தகைய சூழலில், திட்டமிடல் என்பது வெறும் தயாரிப்புப் பணியாக இல்லாமல், ஒளிப்பதிவின் படைப்பாக்கச் செயல்முறையாகவே மாறுகிறது. இயற்கை ஒளியின் தன்மையை உணர்ந்து சரியான நேரத்தில் படமாக்குவது, ஒரே லொக்கேஷனின் வெவ்வேறு சாத்தியங்களைப் பயன்படுத்துவது, குறைந்த உபகரணங்களைக் கொண்டே மாறுபட்ட காட்சித் தோற்றங்களை உருவாக்குவது என ஒவ்வொரு முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது. வளங்களின் பற்றாக்குறை, சில நேரங்களில், வழக்கமான அணுகுமுறைகளைக் கடந்து சிந்திக்கவும், எளிமைக்குள் அழகியலைக் கண்டடையவும் ஒளிப்பதிவாளரைத் தூண்டுகிறது.
பிரம்மாண்டத் தயாரிப்புகள்: வாய்ப்புகளும் சவால்களும்
‘சர்தார் உத்தம்’ போன்ற திரைப்படங்களில், காலகட்டத்தின் உணர்வை உருவாக்குவது ஒளிப்பதிவாளரின் முக்கியப் பொறுப்பு. வரலாற்றுச் சூழல், ஒளியின் தன்மை, வண்ணக் கட்டுப்பாடு, காட்சிகளின் மனநிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வரலாற்று உண்மைத்தன்மையையும் உணர்ச்சியின் ஆழத்தையும் காட்சிகளில் வெளிப்படுத்துவதே அவரது சவால்.
சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களில் பிரம்மாண்டமான செட்கள், உடை வடிவமைப்பு, கலை இயக்கம், ஆழமான வண்ணத் திட்டங்கள், நுட்பமான ஒளியமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து தனித்துவமான காட்சியழகை உருவாக்குகின்றன. இங்கு ஒளிப்பதிவாளர், புரொடக் ஷன் டிசைனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு ஒளி மூலமும், ஒவ்வொரு ஃபிரேமும் காட்சியின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துவதோடு, கதையின் உணர்வையும் ஆழப்படுத்த வேண்டும்.
ராஜமவுலியின் திரைப்படங்களில், பிரம்மாண்டமான ஆக் ஷன் காட்சிகள், பல கேமரா கோணங்கள், சிக்கலான ப்ளாக்கிங், விஎஃப்எக்ஸ் மற்றும் விரிவான பின் தயாரிப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக ஒளிப்பதிவாளர், இயக்குநர், சண்டைக் கலைக் குழு, கலை இயக்கக் குழு மற்றும் விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். படப்பிடிப்பில் பதிவு செய்யப்படும் காட்சிகளையும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் கூறுகளையும் இயல்பாக ஒருங்கிணைப்பதே ஒளிப்பதிவாளரின் முக்கியத் தொழில்நுட்பப் பொறுப்பாகும்.
இத்தகைய பிரம்மாண்டத் தயாரிப்புகளில், அதிக வளங்கள் ஒளிப்பதிவாளருக்குப் படைப்புச் சுதந்திரத்தை விரிவுபடுத்துகின்றன. அதேவேளையில், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, காட்சித் தரத்தைத் தொடர்ந்து பராமரித்தல், கடுமையான படப்பிடிப்பு அட்டவணைக்குள் பணியாற்றுதல் ஆகியவை முக்கியச் சவால்களாக அமைகின்றன.
ஓடிடி ஒரிஜினல்கள்
புதிய தயாரிப்பு அணுகுமுறை ஓடிடி தளங்களுக்கான திரைப்படங்களும் வெப் தொடர்களும் ஒளிப்பதிவுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இவை பிரம்மாண்டமான பட்ஜெட்டிலிருந்து குறைந்த வளங்களைக் கொண்ட கதை மையத் தயாரிப்புகள் வரை மாறுபடுகின்றன. பல எபிசோடுகளைக் கொண்ட தொடர்களில், காட்சித் தொடர்ச்சி, சீரான வண்ணத் தோற்றம், வெவ்வேறு இயக்குநர்கள் அல்லது ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றும்போதும் ஒரே காட்சி மொழியைப் பேணுதல் ஆகியவை முக்கியமானவை. மேலும், மொபைல் திரை முதல் பெரிய தொலைக்காட்சித் திரை வரை வெவ்வேறு சாதனங்களில் காட்சிகளின் தெளிவும் உணர்வும் மாறாமல் வெளிப்படுவதையும் ஒளிப்பதிவாளர் உறுதி செய்ய வேண்டும்.
ஒளிப்பதிவாளரின் திறமை, பட்ஜெட்டின் அளவில் அல்ல; அதன் எல்லைகளுக்குள் அவர் உருவாக்கும் காட்சிப் பார்வையில் இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படைப்பாற்றலைச் சோதிக்கிறது; நடுத்தர பட்ஜெட் கலைக்கும் தொழில்நுட்பத்துக்கும் சமநிலை அளிக்கிறது; பெரிய பட்ஜெட், காட்சிப் பிரம்மாண்டத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது.
இறுதியில், விலையுயர்ந்த கேமராவோ, பிரம்மாண்டமான செட்டோ ஒரு திரைப்படத்தின் காட்சித் தரத்தைத் தீர்மானிப்பதில்லை. கதையை உணர்ந்து, ஒளி, நிழல், வண்ணம், இடம் ஆகியவற்றைக் கலைநயத்துடன் கையாளும் ஒளிப்பதிவாளரின் பார்வையே அதன் உண்மையான காட்சிமதிப்பை உருவாக்குகிறது.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)