திரையில் விரியும் தூரிகை: ஓவியங்களில் இருந்து பிறந்த சினிமா ஃபிரேம்கள் | ஒளி என்பது வெளிச்சமல்ல 18

ரோட் டு பெர்டிஷன்...

ரோட் டு பெர்டிஷன்...

Updated on
3 min read

ஐரோப்​பிய மறுமலர்ச்சி கால ஓவியர்​கள், ஒளியைக் கையாண்ட விதத்​தின் நவீன நீட்​சியே, ஓவி​யங்​கள் திரைச் சட்​டகங்​களாக உரு​மாறும் ரசவாதம். ஓவி​யத்​தின் சட்டக அமைப்பை (ஸ்​டேடிக் ஃபிரேம்), சினிமா தனது நகரும் சட்​டகத்​துக்​குள் (டைனமிக் ஃபிரேம்) கொண்டு வரும்​போது கட்​டமைப்​பு, ஒளி, நிறம், இடவ​மைப்​பு, மற்​றும் கேமரா கோணம் ஆகிய​வற்றை எடுத்​துக் கொண்​டு, அதில் கால​மும் இயக்​க​மும் சேர்க்​கும்​போது, ஒரு புதிய காட்சி மொழி உரு​வாகிறது.

ஒளி-நிழல் விளை​யாட்டு (கி​யாரஸ்க்​யூரோ, டெனிப்​ரிஸம்) - ஓவியர்​கள் லிய​னார்டோ டாவின்சி முதல் கரா​வாஜியோ வரை ஒளியை ஒரு கூர்​மை​யான ஆயுத​மாகப் பயன்​படுத்​தினர். இருளுக்​கும் ஒளிக்​கும் இடையி​லான அதீத முரண் இருண்ட பின்​னணி​யில் ஒரு குறிப்​பிட்ட திசையி​லிருந்து வரும் ஒளி, ஒரு பொருளின் வடிவத்தை அழுத்​த​மாக வெளிப்​படுத்​தும். தி காட்ஃ​பாதர், சின் சிட்டி படங்​களில், ஒளியை விட நிழலுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரப்​படும்.

கியாரஸ்க்​யூரோ (Chiaroscuro) என்ற நுட்​பம் (Chiar - ஒளி, Oscuro – இருள்), தட்​டை​யான ஓவி​யத்​துக்கு முப்​பரி​மாணத் தன்​மை​யைக் கொடுத்​தது. இதுவே சினிமாவில் லோ கீ லைட்​டிங்​காக மாறியது. நிழல்​கள் எதை மறைக்​கின்​றன, ஒளி எதை வெளிப்படுத்​துகிறது என்​பது அந்த கதா​பாத்​திரத்​தின் ரகசி​யத்​தை​யும், மன அழுத்​தத்​தை​யும் குறிக்​கப் பயன்​படுத்​தப்​படு​கிறது.

ரெம்ப்​ராண்ட் லைட்​டிங்: முகத்​தின் மவுனம்: 17-ம் நூற்​றாண்​டின் டச்சு ஓவியர் ரெம்ப்​ராண்ட், மனித முகங்​களை வரைவ​தில் தனித்​து​வ​மான முறையைக் கையாண்​டார்​.​முகத்​தின் ஒரு பகுதி ஒளி​யிலும், மறு​பகுதி நிழலிலும் இருக்​கும். நிழல் கவி​யும் கன்​னப்​பகு​தி​யில், கண்​ணுக்​குக் கீழே சிறிய ‘தலைகீழ் முக்​கோண’ ஒளி படி​யும்.

ஒளிப்​ப​தி​வாளர் ரோஜர் டீக்​கின்ஸ் இன்​றும் இந்த நுட்​பத்​தைப் பயன்​படுத்​துகிறார். முகத்​தின் ஒரு பாதி ஒளி​யிலும் மறு​பாதி இருளி​லும் இருப்​பது, கதா​பாத்​திரத்​துக்கு ஆழத்​தை​யும், மர்​மத்​தை​யும் சேர்க்​கிறது.

ஓவி​யங்​கள்: இயக்​குநர்​களின் விஷுவல் ரெஃபரன்ஸ் - காட்​சி​யின் ஆன்​மாவை விவரிக்க இயக்​குநர்​கள் ஓவி​யங்​களையே முதன்மை ஆதா​ர​மாகத் தேடு​கிறார்​கள். எட்​வர்ட் ஹாப்​பரின் நைட்​ஹாக்ஸ் ஓவி​யம், நவீன சினிமா​வில் ‘நகரத்​துத் தனிமை’ எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தற்கு மிகச்​சிறந்த பாடம். ரோட் டு பெர்​டிஷன், ப்ளேட் ரன்​னர் படங்​களில் வரும் இரவு நேரக் காட்​சிகள் ஹாப்​பரின் சட்​டகங்​களையே பிர​திபலிக்​கின்​றன.

ஜன்​னல் வழி வரும் மென்​மை​யான, ஒருபக்க ஒளியை ஜோஹன்​னஸ் வெர்​மீர் கையாண்ட விதம், பீரியட் படங்​களுக்கு அடிப்​படை. குறிப்​பிட்ட காலக்​கட்​டத்தை பார்​வை​யாளர் நம்​புவதற்​கு, அந்த காலத்து ஓவி​யங்​களின் வண்​ணங்​களே சான்​றாகின்​றன.

சட்​டக​மும் உளவியலும்: கதா​பாத்​திரத்தை எங்கு நிறுத்த வேண்​டும் என்​பதை ஓவி​யங்​களின் ரூல் ஆஃப் தேர்ட்ஸ் மற்​றும் கோல்​டன் ரேஷியோ போன்ற விதி​கள் தீர்​மானிக்​கின்​றன. இயக்​குநர் வெஸ் ஆண்​டர்​சன் ஓவி​யத்​தின் ‘சமச்​சீர் நிலை​யை’ அப்​படியே திரைக்​குக் கொண்டு வரு​கிறார். மற்​றவர்​கள், ஓவி​யங்​களில் உள்ள ‘கவன ஈர்ப்​புப் புள்​ளி​களை’ கேமரா லென்ஸ் மூலம் உரு​வாக்​கு​கிறார்​கள்.

ஓவி​யங்​களின் நிற மொழி​யில் சிவப்பு அதி​காரம் அல்​லது வன்​முறையை​யும், நீலம் அமைதி மற்​றும் தெய்​வீகத்​தை​யும் குறித்​தது. இதையே தி லாஸ்ட் எம்​பரர் திரைப்​படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் வித்​தோரியோ ஸ்டோரோரோ கதை​யின் கால​மாற்​றத்​தைக் காட்​டப் பயன்​படுத்​தி​னார்.

காட்சி அடுக்​கு​முறை (லேயரிங் அண்ட் டெப்த்) - ஓவி​யங்​களில் ஆழத்​தைக் காட்ட அட்​மாஸ்ஃபரிக் பெர்​ஸ்​பெக்​டிவ் பயன்​படுத்​தப்​படும். தி ரெவனன்ட்​,பேரி லிண்​டன் படங்​களில், ஓவி​யங்​களில் இருப்​ப​தைப் போன்றே ‘முன்​னணி’, ‘நடுப்​பகு​தி’, ’பின்​னணி’ என மூன்று அடுக்​கு​களை ஒளிப்​பதிவாளர்​கள் உரு​வாக்​கு​கிறார்​கள். இது தட்​டை​யான திரை​யில் ஒரு முப்​பரி​மாண (3டி) ஓவி​யத்​தைப் பார்க்​கும் உணர்​வைத் தரு​கிறது.

அமைப்பு மற்​றும் தொடுஉணர்வு: எண்​ணெய் ஓவி​யங்​களில் தூரி​கை​யின் தடங்​கள் ஒரு​வித​மான தடிம​னான அமைப்​பைத் தரும். ஃபிலிம் கிரெய்ன் மற்​றும் ஆடை வடிவ​மைப்பு மூலம் இந்​தத் தழு​வல்

சாத்​தி​ய​மாகிறது. தி ஹேட்ஃபுல் எய்ட் திரைப்​படத்​தில், உடைகளின் நயமும், பனித் துளி​களின் அடர்த்​தி​யும் ஒரு ஓவி​யத்​தின் கேன்​வாஸைப் போன்ற உணர்​வைத் தரும்.

ஓவியக் கூறுகளின் திரைத் தழு​வல்: திரை​யில், ஓவி​யத்தை ‘காட்சி நகலாக’ அல்​லாமல், அதன் நுணுக்​க​மான கூறுகளைத் தழு​வு​கிறார்​கள்.

ட்ரீம்ஸ்...

ட்ரீம்ஸ்...

மேரி அண்​டொனெட் - நெப்​போலியன் க்ராஸிங் தி ஆல்ப்ஸ்: ஜாக் லூயி டேவிட் வரைந்த இந்த ஓவி​யத்​தில் காணப்​படும் வீரத் தோற்ற அமைப்​பும், சிலை​யைப் போன்ற உறைந்த உடல் நிலை​யும்​தான் மேரி அண்​டொனெட் திரைப்​படத்​தின் பல காட்​சிகளில் கதா​பாத்​திரங்கள், அருங்​காட்​சி​யகத்​தில் வைக்​கப்​பட்ட உரு​வங்​கள் போலவே சட்​டகத்​துக்​குள் வைக்​கப்படு​கிறார்​கள். கேம​ரா, கீழ்க்​கோணத்​திலிருந்து அவர்​களைக் காட்​டு​கிறது. இவ்​வாறு ஓவி​யத்​தின் போர்ட்​ரெய்ட் மொழி திரை மொழி​யாக மாறுகிறது.

அலாட்​ரிஸ்ட் - லா ரென் டி ஸ்யோன் டெ ப்ராடா: வெலாஸ்​கு​வெஸின் புகழ்​பெற்ற இந்த ஓவி​யத்​தில், மனிதர்​கள் இரு குழுக்​களாகப் பிரிந்​து, ஒரு சாவியைப் பரி​மாறிக்​கொள்​ளும் அமைப்​பு, அலாட்​ரிஸ்ட் திரைப்​படத்​தில் மனிதர்​களின் இடவ​மைப்​பும், பார்​வைக் கோணமும் அப்​படியே காட்​சி​யாக மாற்​றப்​படு​கிறது. கேமரா நாடகத்​தன​மான எந்த அசைவு​களை​யும் செய்​யாமல், ஒரு சாட்​சி​யைப் போல நின்று அந்த ஓவி​யத்​தின் அமைப்​பையே நகரும் காட்​சி​யாக மாற்​றுகிறது.

ஷட்​டர் ஐலேண்ட் - தி கிஸ்: ஓவி​யத்​தில் 2 உடல்​கள் அலங்​கார​மான ஒரு மூடிய உலகுக்​குள் சிக்​கிக் கொண்​டிருப்​பது போலத் தோன்​றும். திரைப்​படத்​தில், மார்ட்​டின் ஸ்கார்​சிஸி இதையே மிக​வும் நெருக்​க​மான சட்​டகங்களின் மூலம் உரு​வாக்​கு​கிறார்.

பின்​னணி சுருக்​கப்​பட்​டு, மனித உடல்​களே முழு சட்டகத்​தை​யும் நிரப்​பும் விதத்தில் காட்​சிகள் அமைக்​கப்​படு​கின்​றன. ஓவி​யத்​தில் உள்ள அந்த மூடப்​பட்ட அமைப்​பு, இங்கே கேமரா சட்​டக​மாக மாறுகிறது.

தி லாஸ்ட் எம்பரர்...

தி லாஸ்ட் எம்பரர்...

ஜோக்​கர் - எகான் ஷீலே: இவரது சுய உருவ ஓவி​யங்​களில், உடல் கோணலாக​வும் சமநிலை இழந்​த​தாக​வும் தோன்​றும். ஜோக்​கர் திரைப்​படத்​தில், ஹோகின் ஃபீனிக்​ஸின் உடல் மொழி​யும் அதே கோணலான வடிவ​மைப்​பில் காட்​சி​யளிக்​கிறது. கேமரா அவரை சில நேரங்​களில் நெருக்​க​மாக​வும், வித்​தி​யாச​மான கோணங்​களி​லும் காட்​சிப்​படுத்​து​வதன் மூலம், ஓவி​யத்​தின் அந்த சிதைந்த உடலமைப்பு சினிமா காட்​சி​யாக மாற்​றப்​படு​கிறது.

தி ட்யூவெலிஸ்ட்ஸ் - 19-ம் நூற்​றாண்டு ஓவி​யங்​கள்: இந்த ஓவி​யங்​களில் காணப்​படும் இயற்கை ஒளி, மென்​மை​யான நிழல்​கள் மற்​றும் மண்​ணிற வண்​ணங்​களின் தோற்​றத்​தை, தி ட்யூவெலிஸ்ட்ஸ் திரைப்​படம் தன் காட்​சிகளில் கொண்டு வரு​கிறது. இந்​தப் படம் ஒரு நகரும் ஓவி​யத் தொகுப்​பைப் போலவே தோன்​றும் வகை​யில் ஒளி மற்​றும் நிற அமைப்​பு​கள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

ட்ரீம்ஸ் - வான்கா: அகிரா குரசோவா தனது ட்ரீம்ஸ் திரைப்​படத்​தில், வான்​கா​வின் ஓவிய உலகத்​துக்​குள்​ளேயே செல்​கிறார். ஓவி​யங்​களின் வண்​ணங்​களும், சிதைந்த பார்​வைக் கோணங்​களும், தூரி​கைத் தடங்​களை நினை​வுபடுத்​தும் இயக்​கங்​களும் காட்சி உலக​மாக மாறுகின்​றன.

சிறந்த இயக்​குநர் ஓவி​யத்​திலிருந்து அந்த ஓவியன் உலகைப் பார்த்​த ‘தொழில்​நுட்​பக்​ கோணத்​தை’ (டெக்​னிக்​கல்​ ப்ராஸ்​பெக்ட்​) எடுக்​கிறார்​. ஓவி​யம்​ காலத்​தின்​ ஒரு கணத்​தை உறைய வைப்​பது. சினிமா உறைய வைத்​த கணங்களுக்கு உயிர் கொடுத்து ஓட விடுவது!.

(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)

ரோட் டு பெர்டிஷன்...

ஒளியும் வெற்றிடமும் மவுனக் கவிதை | ஒளி என்பது வெளிச்சமல்ல 17

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in