

திரை பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் மற்றும் வேல்ஸ் குழுமங்களின் தலைவர் ஐசரி கே.கணேஷ், நடிகை ப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு வேல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் சரத்குமார் ஆலோசகராகவும், நடிகை மீனா அணியின் தூதராகவும் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். அறிமுக நிகழ்ச்சியில் ஐசரி கே.கணேஷ், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி, முரளி விஜய், நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, சரத்குமார், ராதிகா சரத்குமார், மீனா, வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் குஷ்மிதா கணேஷ், நாகார்ஜுனா சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டி ஜன.16-ம் தேதி தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும்.