

சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகள் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளன. இந்தநிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ‘நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் வீடுகளில் இன்னும் சற்று நேரத்தில் குண்டுகள் வெடிக்கும்’ என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதை கண்டறியும் பணியில் சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.