

மறைந்த இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்திருந்த ‘புலவர்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தின் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
1.48 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் காட்சிகளில், புலவர் என அழைக்கப்படும் மெய்யாண்டவர், பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரிக்கிறார். வீடு போல இருக்கும் இடத்தில் விசாரணை அதிகாரியான பாராதிராஜா சீருடையில் இல்லாமல் வேஷ்டி, பனியனில் இருக்கிறார். அங்கே, ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம், ‘அந்தப் பெண்ணை யார் மண்டையில அடிச்சு கொன்னா?’ ‘யார் சொல்லி இந்தக் கொலையை செஞ்சீங்க?’ எனத் தீவிரமாக விசாரிக்கிறார். அந்த நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க போராடுகிறனர்.
இந்த கொலை விசாரணை சமயத்தில் கலகலப்பாகவும், சமயத்தில் கடுமையாகவும் செல்கிறது. கொலை செய்யப்பட்டது யார்?, இந்தப் புலவர் யார்?, எதற்காக இந்த விசாரணை என்பதற்கான பதில்களை சொல்லாமல் அதைத் திரையில் காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்த ட்ரெய்லர்.
முருகைய்யா எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜாவுடன், ரேச்சல் ரெபக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா, பூபாலம் செந்தில், சப்ளின் சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சூப்பர் டாக்கீஸ் மற்றும் வொயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் ‘புலவர்’ படத்துக்கு ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு பணியினையும், தனசேகர் படத்தொகுப்பும் பணியினையும் செய்துள்ளனர். படத்துக்கு அஜ்மல் கான் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட, தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி காலமானார். அவர் இறுதியாக நடத்த படம் இது என்பதால் இயல்பாகவே படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்தப் படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படம் அக்டோபர் 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.