‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: ‘ஜனநாயகன்’ படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை பிரச்சினையால் மறு ஆய்வுக்குழுவின் முன்பாக நிலுவையில் உள்ளது, இந்நிலையில், இந்தப் படம் கடந்த ஏப்.3-ம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.

இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 9 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “இந்த வழக்கில் கைதான 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளிகள் பலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். எனவே, 9 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுத்திடுக: தவெக அரசுக்கு பாஜக, அமமுக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in