

‘‘இன்று சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என ஐந்து வயது குழந்தை தனது வீட்டின் அறையில் உட்கார்ந்து பார்க்கிறது. அங்கு நடக்கும் தகவல்கள் எல்லாம் அதற்கும் தெரிகிறது. முதல்வர் விஜய் மிகவும் உறுதியான தலைமுறையை உருவாக்குகிறார் என்றே நான் நினைக்கிறேன்” என்று இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு பேசும்போது, “என்னுடைய நன்றி உரையாக இந்தப் பேச்சை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ‘பத்தா’. என்னைப் பொறுத்தவரை ‘பத்தா’வே ஓர் ஆள்தான்.
ஒரு சில படங்கள் மூலம் காலம்தான் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும். ‘பத்தா’வும் நிச்சயமாக அப்படி ஒன்றை நிச்சயம் சொல்லிக் கொடுக்கும். எல்லா அப்பாக்களுக்கும், எல்லா பெண் குழந்தைகளுக்கும் ஒரு விஷயத்தை இது சொல்லி கொடுக்கும். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில், தயாரித்து வெளியிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறோம்.
நாம் கொண்டாட தவறிய ஓர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ஒரு மழைநாளில் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருப்பதாக சொன்னதும், நீ பண்ணுகிறாயா எனக் கேட்டார். நான் வெற்றிமாறனுக்கு இதைக் கொடுப்பாதாக இருந்தேன் என்றார். அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள். நாம் சேர்ந்து பண்ணலாம் எனச் சொல்லி இணைந்தோம். இது நிச்சயமாக விருதுக்கான படம் இல்லை. பக்காவான வணிக சினிமாதான்.
இன்று நான் போட்டிருக்கும் இந்த உடைகள், வாட்ச் எல்லாம் என்னுடையது உழைப்பில் கிடைத்தது என நான் நினைத்தாலும், என்னுடைய அண்ணன், முதல்வர் விஜய் இல்லை என்றால், இது எதுவும் சாத்தியமே இல்லை, நிச்சயமாக சாத்தியமில்லை.
‘ராஜா ராணி’ படம் பண்ணிய பிறகு நான் பேசப்பட்டேன். நான் நல்ல இயக்குநர்தான் என எனக்கு தெரியும். ஆனால், அந்த மனிதர், எனக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்து வாழ்க்கை கொடுத்தார்.
ஷாருக்கான் என் அலுவலகம் வந்து எங்களுக்குள் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவர் (விஜய்), ‘டேய் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. என் காலை சுத்தி சுத்தி வராத. அந்தப் படத்தை தயவுசெய்து பண்ணிரு, உன் வாழ்க்கை மாறிடும்னு சொன்னார். சொன்னது போல் என் வாழ்க்கையும் மாறியது. நான் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறேன். நன்றி விஜய் அண்ணா. இருந்தாலும் நம்ம அண்ணன் நம்ம அண்ணன்தான்.
ஊர் ஆயிரம் பேசும். யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். நீங்கள் ஊருக்கு போக வேண்டுமோ போய்க்கொண்டே இருங்கள். வாழ்க்கை நீங்கள் போக நினைக்கும் இடத்துக்கு உங்களை நிச்சயம் அழைத்துச் செல்லும். ஏனெனில் அடுத்தது நாம்தான். நாம்தான் ஜென்ஸீகள். நாம் தெளிவாகவும், உண்மையாகவும் இருக்கிறோம்.
நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அடுத்த தலைமுறை அரசியலில் உறுதிமிக்கவர்களாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம், முதல்வர் விஜய்தான். நான் அரசியல் பேசவில்லை. நான் அரசியல்வாதியும் இல்லை. அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், ஒன்று சொல்கிறேன். எனது முந்தைய தலைமுறையினருடன் நான் இருந்திருக்கிறேன். நான் தலைமைச் செயலகம், சட்டப்பேரவையைப் பார்த்தது இல்லை.
இன்று சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என ஐந்து வயது குழந்தை தனது வீட்டின் அறையில் உட்கார்ந்து பார்க்கிறது. அங்கு நடக்கும் தகவல்கள் எல்லாம் தெரிகிறது. முதல்வர் விஜய் மிகவும் உறுதியான தலைமுறையை உருவாக்குகிறார் என்றே நான் நினைக்கிறேன். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
இனி யாரும் அரசியல் நமக்கானது இல்லை எனச் சொல்ல முடியாது. அரசியல் நமக்கானதுதான். அதை எந்த அளவுக்கு, எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற அறிவும் தெளிவும் நமக்கு இருக்கிறது. யாரும் நம் மீது அதைத் திணிக்க முடியாது.
என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும். சமூகத்துக்கு நல்லதை மட்டுமே நாம் செய்வோம். தொடர்ந்து அதைச் செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்திடுங்கள். தலைவன் சொன்னது. அதை பின்பற்றுங்கள். நன்றி’’ என்று அட்லீ பேசினார்.
விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 - இயக்குநர் அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ஒரு தந்தை - மகள் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.