

பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
’டியூட்’ படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் பிரதீப் ரங்கநாதன் என தகவல் வெளியானது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில், “பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார். அப்படத்தை தயாரிக்கவுள்ளோம். 2026-ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி, அதே ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது உறுதியாகிறது. இப்படம் முழுக்க சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகும் படம் இதுவாகும். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் தெரியவரும்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ’லவ் டூடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை தயாரித்தது ஏஜிஎஸ் நிறுவனம். மேலும், ‘டியூட்’ படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.