

புதுடெல்லி: இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்-ஐ கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த இந்த உயர்மட்ட விருந்தில், இந்தியத் திரைத்துறையின் சார்பில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தென் கொரியாவில் பெருமளவில் படமாக்கப்பட்ட 'மேட் இன் கொரியா' திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் 12 அன்று வெளியான இந்த படம், மூன்று வாரங்களுக்குள் 1.35 கோடிப் பார்வைகளைக் கடந்து உலக அளவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தது.
54 நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ள 'மேட் இன் கொரியா' திரைப்படம், இந்தியா மற்றும் தென் கொரியா இடையிலான கலை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தின் அடையாளமாக இந்த விருந்தில் முன்னிறுத்தப்பட்டது. இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரபல கொரிய பாப் பாடகரான அவூரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா மோகன், “ராஷ்டிரபதி பவனில் ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுது. இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில், பிரதமர்நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் ஆகியோரின் முன்னிலையில் கலந்து கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.
இத்தகைய தலைவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தியதை பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். எங்களது ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தை அவர்கள் பாராட்டியது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என்னுள்ளே இருக்கும் அந்தச் சிறுமி இன்று ஒரு மிகப்பெரிய சாதனையை உணர்கிறாள். பல ஆண்டுகால கனவுகள், கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையை இந்த நிமிடம் அமைதியாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய ‘மேட் இன் கொரியா’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.