நடிகை கீரத்தி ஷெட்டி
செயற்கை நுண்ணறிவு ஆபத்து: கீர்த்தி ஷெட்டி எச்சரிக்கை | சிறப்பு பேட்டி
நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’, டிச.12-ல் வெளியாக இருக்கிறது. ராஜ் கிரண், சத்யராஜ் என பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியிடம் பேசினோம்...
‘வா வாத்தியார்’ என்ன மாதிரியான படம்?
இது, 90-கள்ல வந்த கமர்ஷியல் மசாலா படம் எப்படி இருக்குமோ, அதை போல, அந்த படங்களுக்கு 'ட்ரிபியூட்' மாதிரி பண்ணியிருக்கிற படம். ஒரு பண்டிகை நாள்ல கொண்டாட்டமா, ஜாலியா பார்க்கிற மாதிரியான படமா இது இருக்கும். அதோட, எம்.ஜி.ஆர் பற்றி பழைய தலைமுறையினருக்கு நல்லா தெரியும். என்னைப் போல இருக்கிற தலைமுறைக்கு அதிகம் தெரியாது.
இந்தப் படம் அவரைப் பற்றி தெரிஞ்சுக்கிற மாதிரி, அவரோட உதவும் குணம், எல்லோருக்கும் நல்லது பண்ணணும்னு நினைக்கிற மனம், அதை வெளிப்படுத்தற மாதிரியும் இருக்கும். அதுமட்டுமில்லாம, வேற விஷயங்களும் கதையில இருக்கு. இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆர் நடிச்ச ‘அன்பே வா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை பார்த்தேன். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்ப பிடிச்சது.
‘வா வாத்தியார்’ உங்களுக்கு மூன்றாவது தமிழ்ப் படமா?
இல்லை. இதுக்கு முன்னால நான் நடிச்சு தமிழ்ல வந்த ‘த வாரியர்’, ‘கஸ்டடி’ நேரடி தமிழ்ப் படங்கள் இல்லை. இதுதான் என்னோட நேரடித் தமிழ்ப் படம். தெலுங்குல நான் நடிச்ச ‘உப்பென்னா’வுக்குப் பிறகு தமிழ்லயும் நிறைய வாய்ப்பு வந்தது.
ஒரு படத்துல அறிமுகமாகுறீங் கன்னா, அந்தப் படம்தான் நம்ம கேரியரையே தீர்மானிக்கிறதா இருக்கும். அதனால வித்தியாசமான கதைகள்ல நடிக்கணும்னு நினைச்சேன். அதுதான் நேரடி தமிழ்ப் படத்துல நடிக்க கொஞ்சம் டைம் எடுத் துடுச்சு. இந்தப் படம் அதுக்கான சரியா வாய்ப்பா அமைஞ்சது.
கார்த்தியோட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?
கார்த்தி சாரோட தீவிரமான ரசிகைன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன், அவரோட ‘பையா’ படத்துல இருந்தே ரசிகை. லிங்குசாமி சார் கூட ‘த வாரியர்’ படத்துல நடிக்கும்போது அவர்கிட்ட சொன்னேன், கார்த்தி சாரை பார்க்கணும்னு. அப்ப முடியல. பிறகு நான் நடிச்ச படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது, பக்கத்துல அவர் நடிச்ச படத்தின் ஷூட்டிங் நடந்தது. அப்ப பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். அப்பவும் முடியாம போச்சு. பிறகு நதியா மேடம் போன் பண்ணி கொடுத்தாங்க. அப்ப பேசினேன்.
இது நடந்து ரொம்ப வருஷமாச்சு. பிறகு இந்தப் படத்துக்காக அவரை சந்திச்சதும், 'ஏற்கெனவே பேசியிருக்கோம், ஞாபகமிருக்கா?'ன்னு கேட்டார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. பொதுவா சினிமாவுல ஒரு விஷயம் சொல்வாங்க, ‘உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ இருந்தா, அவங்களை சந்திக்க வேண்டாம், உங்க எதிர்பார்ப்பு போயிரும்’னு. ஆனா எனக்கு அப்படி இல்லை. கார்த்தி கூட முதல் நாள்லநடிக்கும்போது கொஞ்சம் பதற்றமா இருந்தது. பிறகு சகஜமாயிட்டேன். அவரும் எனக்கான ‘ஸ்பேஸை’ கொடுத்தார். அது எனக்கு உதவியா இருந்தது.
ஒவ்வொரு வாரமும் புது புது ஹீரோயின்கள் வந்துட்டு இருக்காங்க...
போட்டியை எப்படி சமாளிக்கிறீங்க? அதை போட்டின்னு சொல்ல முடியாது. அப்படி நினைக்கவும் வேண்டாம். இங்க அவங்கவங்களுக்கான இடம் அங்கேயேதான் இருக்கு. என்னை பொறுத்தவரை நான் எப்படி என்னை வளர்த்துக்கணும், என் திறமையை எப்படி வெளிப்படுத்தணும்னுதான் பார்க்கிறேன். அதனால யாரையும் போட்டியா பார்க்கலை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சினிமா துறைக்கு ரொம்ப அபாயகரமானதா மாறிகிட்டிருக்குன்னு சொல்றாங்களே...: ஆமா. இன்ஸ்டாகிராம்ல என்னோட ஒரு புகைப்படத்தை பார்த்து நானே ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைஞ்சேன். என் பக்கத்துல ஒருத்தர் நின்னுட்டிருக்கார். என் கையை அவர் மேல போட்டிருக்கிற மாதிரியான புகைப்படம் அது. அவர் யாருன்னே தெரியல. பிறகுதான் அது ஏ.ஐ.ல உருவாக்கின படம்னு தெரிஞ்சது. நடிகை அப்படிங்கறதால அப்படி ஒரு போட்டோவை உருவாக்க உரிமை இருக்குன்னு நினைக்கிறாங்க. ஏ.ஐ.பற்றி என் பெற்றோருக்கு தெரியுங்கறதால எனக்கு பிரச்சினையில்லை. ஆனா, இது ஆபத்தானது.
அடுத்து?
அடுத்து பிரதீப் ரங்கநாதனோட எல்ஐகே, ஜெயம் ரவியோட ஜீனி படங்கள்ல நடிச்சிருக்கேன். இரண்டு படமுமே முடிஞ்சிருச்சு. இந்தப் படங்கள்லயும் என் கேரக்டர் பேசப்படறதா இருக்கும்.
