

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோதரர் பிரசாந்துக்கும் சின்னத் திரை நடிகை முஸ்கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 2022-ல் பிரிந்தனர்.
இந்நிலையில் மும்பை அம்போலி போலீஸ் ஸ்டேஷனில் ஹன்சிகா குடும்பத்தின் மீது முஸ்கன் நான்ஸி குடும்ப வன்முறை புகார் அளித்தார். அதில், “ஹன்சிகாவும் அவரது தாயார் மோனோவும் என் திருமண வாழ்க்கையில் தலையிட்டு எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தினர். அவர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்.
இதன் காரணமாக, முகத்தின் ஒரு பக்க தசைகளில் செயலிழப்பை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டேன்” என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து ஹன்சிகா உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான இப்புகாரை ரத்து செய்யக்கோரி ஹன்சிகா மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இதற்கிடையே, தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடனான தனது விவாகரத்தைக் கடந்த மார்ச் மாதம் ஹன்சிகா உறுதி செய்தார். இந்நிலையில் மும்பை திண்டோஷி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு முஸ்கன் நான்ஸி மீது ஹன்சிகா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது அண்ணனுக்கும் நான்சிக்கும் திருமணம் நடந்தபோது, நான்சியிடம் ரூ.27 லட்சம் கடனாகக் கொடுத்தேன்.
அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதற்காக, என் மீது பொய்யான புகார்களை சமூக வலைதளங்களில் நான்சி கூறி வருகிறார். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்கும் அவர் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனி எனக்கு எதிராக எந்த கருத்தையும் பேச தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.