

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என தன்னை பாதித்த கசப்பான உறவு அனுபவம் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடிகை அனுபமா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், ‘தன்னைத்தானே சரிபடுத்திக்கொள்ளும் பயணம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரனின் காதல் முறிந்துவிட்டது என செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், அனுபமாவின் பேட்டி ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.
சமீபத்தில் அவர் அளித்த அந்தப் பேட்டியில், “இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர், ‘ஓ... அவள் மீண்டு வருகிறாள். கடைசியில் நான் மீண்டு வந்து என் வாழ்வின் அமைதியை கண்டடைந்து விட்டேன்’ என்று சொல்கிறார்கள். அந்த மற்றொரு தரப்பினர் நிச்சயமாக ஏதேதோ உளறுகிறார்கள்.
அந்த ஒரு பதிவுக்குப் பின்னால் என் இரண்டு ஆண்டு கால உடல் மற்றும் மனரீதியான வலிகள் உள்ளன.
நான் ஏதோ சில சாதாரணமான படங்களை பதிவிட விரும்பவில்லை. நான் மீண்டு முழுவதுமாக தயாரான பின் சில விஷயங்களை பதிவிட விரும்பினேன். அது என்னை நானே சரிபடுத்திக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டு, தன்னைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும் பெரிதான ஒன்றை தெரிந்து கொண்ட ஒரு பெண்ணுடைய குரலாக இருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் நான் நார்சிஸ்டிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டேன். அதை இப்படி சொல்வது வேடிக்கையாக கூட இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் ஓர் அந்நியன் இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஒருவர் நம் வாழ்வில் கிடைப்பதற்கு நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இது நிஜமா, இல்லை கற்பனையா என ரெமோவைப் போல் ஒருநாள் அவர் நம்மை நேசிப்பார். அடுத்த நாள் அதே ஆள் அந்நியன் போலாகி விடுவார். அது மிகவும் கொடூரமாக இருக்கும். மறுநாள் அதே நபர் வந்து கெஞ்சி, கூத்தாடி உங்களிடம் மன்னிப்பு கேட்பார். இனி இதுபோல் நடக்காது என்று ஒரு குழந்தையை போல அழுது சத்தியம் செய்வார். இது ஒரு சங்கிலித் தொடர் போல மீண்டும் மீண்டும் நடக்கும்.
நான் இப்படி ஒரு கசக்கும் உறவுக்குள் இருந்தேன். அவர் ‘டிராகன்’ போன்ற படங்களின் ப்ரமோஷன்களுக்கு கூட என்னைப் போக விடவில்லை. எங்களுக்குள் நட்பு தொடங்கி மூன்று மாதங்களுக்குள் அவரின் குடும்பம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் வரை யோசித்தனர். அப்போது அவர் மிகவும் இளம்வயதினராக இருந்தார்’ என்று அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
பேட்டியின்போது தனது பிரச்சினைக்குரிய உறவு பற்றி விவரித்த அனுபமா, அந்த நபர் யார் என்பதை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.