

நடிகை அன்னா பென்
அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை அன்னா பென் பேசும்போது, “இது எனது 2-வது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த மீனா கதாபாத்திரத்துக்கு முற்றிலும் எதிர்மாறான வேடத்தில் இதில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு சவாலாக இருந்தது. பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது.
ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது. ஹரிஷிடம் நான் ரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை.
படப் பிடிப்பு தளத்தில் எந்த சவால் வந்தாலும், எந்த சந்தேகம் எழுந்தாலும், அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இதன் படப்பிடிப்பில் யோகி பாபு சார் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.