

‘‘ராதா தான் எனக்கு அந்தக் காசோலைகளைக் கொடுத்தார்’’ என்று தன் மீது தங்கை கொடுத்த மோசடி புகார் தொடர்பாக நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்பிகா கூறியது: “இப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்துவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்துள்ளது. எனது சகோதரி என் மீது மோசடி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இப்போது ஏன் இந்தப் புகார் கொடுக்க வேண்டும், அம்பிகா ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார் என பலருக்கும் கேள்வி இருக்கிறது. நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. ராதா தான் காசோலைகளை கொடுத்தார் என்பதும், அந்த காசோலைகளை அவர் நிறுத்தி வைத்தார் என்பதும்தான் உண்மை.
ஏஆர்எஸ் கார்டன் பற்றி உங்களுக்குத் தெரியும். கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய அதை என்னுடைய சொந்த குழந்தையாகத்தான் இன்றும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் அங்கு போனபோது அங்கே ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயருக்கு பதிலாக வேறு ஒரு பெயர் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராதாவின் உழைப்பு இருந்தாலும் அதில் பெரும் பகுதி உழைப்பு என்னுடையது என்று சினிமா உலகத்துக்கே தெரியும்.
அதன் பங்கு விஷயமாக நான் அவரிடம் பேசினேன். நீண்ட காலமாக அந்தப் பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு அவர் தரப்பில் எந்தப் பதில் சொல்லவில்லை. அதேபோல் ஏஆர்எஸ் என்று ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு இருக்கிறது. அது தொடர்பாகவும் பேசினோம். ஆனால், பதில் இல்லை. இவை தொடர்பாக நாங்கள் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்து விசாரணையும் நடந்தது.
என் தங்கைக்கு நகைகள் என்றாலே பலவீனம். நானும் அம்மாவும் சேர்ந்து வாங்கிய என்னுடைய தங்க நகைகள் மட்டும் என் தங்கையிடம் அதிகமாக இருக்கிறது. அதையும் திருப்பிக் கேட்டோம். அதற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை.
அம்மா இறப்பதற்கு முன்பே சொத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்று நாங்கள் பேசி எழுத்துப்பூர்வமாக முடிவு செய்து கொண்டோம். அம்மா இறப்பதற்கு முன் ஏஆர்எஸ் கார்டன் பெயரில் அம்மாவின் பெயருக்கு பதிலாக என் பெயரைச் சேர்க்கும்படி ராதாவிடம் கூறியிருக்கிறார். இதை ராதாவின் கணவர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இது எதையும் கேட்காமல் ராதா அதற்கு அவரின் பெயரை மட்டும் வைத்து விட்டார்.
பணம் வைத்திருக்கும்போது தனது கை பையில் பூட்டுப் போடும் அளவுக்கு முன்னெச்சரிக்கை உள்ளவர் என் தங்கை ராதா. அப்படிபட்டவர் கையெழுத்திட்ட காசோலைகளை வீட்டின் கபோர்டில் வைத்துவிட்டு போனேன் எனச் சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது.
காவல் துறையில் நாங்கள் புகார் கொடுத்தபோது ராதாவின் சார்பில், ஏஆர்எஸ் கார்டனில் என் பங்குக்காக, அவரிடம் இருக்கும் என் நகைகளுக்காக, இன்னுமொரு நிலம் தொடர்பாக என ஐந்து காசோலைகளை ராதா எனக்கு கொடுத்தார். அதில் தொகை எவ்வளவு, எதற்காக அவை வழங்கப்பட்டன என்கிற விவரங்கள் இருக்கின்றன.
எனக்கு காசோலைகள் வழங்கியது ராதாதான். அதை நிறுத்தி வைத்ததும் அவர்தான். காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்து, பணம் பறிபோனது எனக்கு தான். அப்படியென்றால் நான்தானே புகார் தர வேண்டும். ஆனால், அவர் என்மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்த அளவுக்கு அவர் மாறிப்போவார் என நான் நினைத்துப் பார்த்தது இல்லை. நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை திசை திருப்புவதற்காக அவர் இவ்வாறு புகார் கொடுத்துள்ளார்” என நடிகை அம்பிகா தெரிவித்தார்.
முன்னதாக, சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது அம்பிகாவின் தங்கையும், நடிகையுமான ராதா செப்டம்பர் 21-ம் தேதி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.