“இது அண்ணன் - தம்பி பொங்கல்”: விஜய் உடனான போட்டிக்கு சிவகார்த்திகேயன் பதில்

“இது அண்ணன் - தம்பி பொங்கல்”: விஜய் உடனான போட்டிக்கு சிவகார்த்திகேயன் பதில்
Updated on
2 min read

‘ஜனநாயகன்’ படத்துக்கு போட்டியாக ‘பராசக்தி’ வெளியாக இருப்பது தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார்.

பின்பு ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியாவது குறித்து பேசும் போது சிவகார்த்திகேயன், “இப்போது ரிலீஸ் விஷயங்களுக்கு வருகிறேன். முதலில் இப்படம் தொடங்கப்பட்ட போது ஆகாஷிடம் முதலில் தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடலாமா என்று பேசினோம். அக்டோபரில் விஜய் அண்ணா படம் வருகிறது. பொங்கலுக்கு எந்தவொரு படமும் வெளியாகவில்லை, நாம் அதில் வரலாம் என்றார். சூப்பர் என முடிவு செய்துவிட்டோம். சில நாட்கள் கழித்து ‘ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடு என்று அறிவிப்பு வருகிறது.

உடனே ஆகாஷை அழைத்து பேசினேன். 10 நாட்கள் விடுமுறை என்பதால் இரண்டு படங்கள் தாங்கும் அண்ணா என்றார். இதனை மாற்ற முடியுமா என கேட்ட போது, முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஜனவரி வெளியீடு என்று தான் வியாபாரம் செய்துள்ளோம் என்றார் ஆகாஷ். மேலும் ஜனவரியை விட்டால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் பண்ண வேண்டும். அப்போது தேர்தல் இருக்கிறது, ஆகையால் ஜனவரி தான் சரியாக இருக்கும் என்றார். அவர் கூறியதும் சரியாக தான் இருந்தது.

உடனே விஜய்யின் மேலாளர் ஜெகதீஷுக்கு அழைத்தேன். என்ன ப்ரோ பொங்கலுக்கு மாற்றியிருக்கிறீர்கள் என்றேன். அவரோ வியாபார விஷயங்களை முன்வைத்து மாற்றியிருக்கிறோம் ப்ரோ. 2 படம் வரலாம் என்றார். 2 படம் வர்றது பிரச்சினையில்லை ப்ரோ, விஜய் சாரோட கடைசிப் படம் அது தான் பிரச்சினை என்றேன். 2 படமும் வெற்றி பெரும் ப்ரோ, நீங்கள் பண்ணுங்க என்றார்.

ப்ரோ, விஜய் சாரிடம் என்ன நடந்தது என்பதை சொல்லிவிடுங்கள், இல்லையென்றால் இடையே சில பேர் காமெடி பண்ணிட்டு இருப்பாங்க என்றேன். அவரும் விஜய் சாரிடம் பேசிவிட்டு, எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் சாரும் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்ல சொன்னார். ஒன்றும் பிரச்சினையில்லை என்றார். இது தான் நிஜத்தில் நடந்தது. இதை சிலர் மாற்றி மாற்றி பேசுகிறார்கள். சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம்.

எனக்கும் விஜய் சாருக்கும் இடையே நல்லதொரு நட்பு இருக்கிறது. ஜனவரி 9-ம் தேதி அனைவரும் திரையரங்கில் ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாடுங்கள். கடந்த 33 வருடங்களாக திரையில் நம்மை மகிழ்வித்து இருக்கிறார். அவரை கொண்டாட வேண்டும். ஜனவரி 10-ம் தேதி ’பராசக்தி’ படத்துக்கு வந்து கொண்டாடுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தை கையாள்வது கடினமாக இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்பதே தெரியவில்லை. ஒரு புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை AI-யிடமே கேட்கும் சூழலில் தான் நாம் இருக்கிறோம். அவரவர் படங்களை அவரவர் கொண்டாடுங்கள். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இது அண்ணன் - தம்பி அவ்வளவு தான்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

“இது அண்ணன் - தம்பி பொங்கல்”: விஜய் உடனான போட்டிக்கு சிவகார்த்திகேயன் பதில்
லடாக்​கில் ‘துரந்​தர்’ படத்​துக்கு வரி விலக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in