

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மலேசியாவில் நடக்கும் கார் பந்தயப் போட்டிக்காக அங்கு சென்றுள்ளார். அங்குள்ள செபாங் மோட்டார் பந்தய மைதானத்தில் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் அஜித் வழிபட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அங்கு கடை திறப்பு விழாவுக்குச் சென்றுள்ள நடிகர் சிலம்பரசன், அஜித்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.
இருவரும் பேசிக்கொண்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.