

நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் பழகி வருவதும் பல்வேறு விழாக்களில் இருவரும் ஜோடியாகப் பங்கேற்றதும் சர்ச்சையானது. இதைக் கண்டித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி பதிவிட்டு இருந்தார்.
இதற்கிடையே பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் சென்னையை விட்டுச் செல்வதாகவும் நேற்று முன் தினம் பதிவிட்டு இருந்தார். அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த ரவி மோகன் கண்ணீருடன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்கப் போவதில்லை. என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. எப்போது என் தனிப்பட்ட வாழ்க்கை சரியாகிறதோ, எப்போது இந்த ‘சைபர் புல்லிங்’ எல்லாம் நிற்கிறதோ, அப்போது கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவேன். அது கடவுள் கையில் இருக்கிறது.
23 வருடமாக நடித்து வருகிறேன். எனது 95 சதவிகித திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. என் குடும்பம்தான் எனக்கு எல்லாம். அவர்களை ஏதும் சொன்னாலோ, சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ நான் சும்மா இருக்க மாட்டேன். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே என் தப்பு. என் பிள்ளைகளைப் பார்க்க விட மறுக்கிறார்கள். ஸ்கூலுக்கு பாதுகாவலர்களோடு அனுப்பி வைக்கிறார்கள்.
அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றுதானே ஓடி வந்தேன். என்னை ரத்தம் வரும் அளவுக்குச் சுரண்டினார்கள். வீட்டை விட்டு எதுவுமே இல்லாமல் வெளியே வந்தேன். நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். என் நண்பர்கள் என்னைக் காப்பாற்றினார்கள். கோடிக் கணக்கான ரூபாயில் நான் கட்டிய வீட்டில் அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். வெளியே போ என்று சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
ஒருவனை எவ்வளவுதான் கிண்டல், கேலி செய்வீர்கள்? முதலில் நான் மனுஷன். ஒரு மனிதனுக்கு கஷ்டம் வரும்போது, உடன் நின்றவர் கெனிஷா. என்னுடைய 45 வயதுக்குப் பிறகு அழகுக்குப் பின்னால் ஓடுவதாகச் சொல்கிறார்கள். என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவை, அதற்காக எதையாவது சொல்கிறார்கள். சைபர் புல்லிங் மூலமாக கெனிஷாவை காலி பண்ணி அனுப்பி விட்டார்கள். 23 வருட திரைவாழ்வில் எந்த ‘பிளாக்மார்க்’கும் இல்லாமல்தானே இருந்தேன்.
அவர்களுக்கு நான் உயிரோடு இருக்கக் கூடாது. அதுதான் தேவை. அது கண்டிப்பாக நடந்து விடும். அதற்கு முன்னால் எல்லோரையும் முடித்துவிட்டு சந்தோஷமாகப் போவேன். என் குழந்தைகளைப் பார்க்க விடாததால் என் கைகளை வெட்டிக்கொண்டேன். இதுதான் இனி நடக்கும். அதுதான் அவர்களுக்கும் வேண்டும்” என்று கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர்விட்டார்.
பிறகு பேசிய அவர், “என்னைப் பற்றி பேச இட்லி நடிகைக்குத் தகுதி இல்லை. 3 பேரின் வாழ்க்கையை அழிக்க முயன்ற அந்த நடிகை, என்னைப் பற்றி பேச ஏதாவது துப்பு இருக்கிறதா? அவருக்கு எந்த அருகதையும் இல்லை. இனி பேசினால் நான் சும்மா விட மாட்டேன். இவ்வாறு ரவிமோகன் கூறினார்.