

விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ பட்டர்பிளை’ படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, அதுல், நாசர், லட்சுமி பிரியா, கீதா கைலாசம் உள்பட பலர் நடித்துள்ளனர். வைசாக் சோம்நாத் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பலாம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 6-ல் வெளியாகிறது. இப்படம் பற்றி விஜய் ரங்கநாதன் கூறும்போது, “தனித்துவமான படம் இயக்க வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தேன்.
இந்தப் படம் அப்படித்தான் உருவாகி இருக்கிறது. ஏற்கெனவே வெளியாகி இருக்கிற படம் போல இது இருக்காது. தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வேண்டும் என்றால் எந்த படம் போல இது இருக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு அப்படி எந்தப் படத்தையும் உதாரணமாகச் சொல்ல முடியவில்லை என்பதால் நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம். இது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரிலேசன்ஷிப் த்ரில்லர்’ படம். நிவேதிதா சுரேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.
லட்சுமி பிரியா சன்னியாசியாக நடித்திருக்கிறார். படத்தில் பட்டாம்பூச்சி ஒன்று கதாபாத்திரமாகவே வருகிறது. இப்படம் கண்டிப்பாக புது அனுபவத்தைத்தரும்” என்றார்.