Published : 31 May 2023 02:52 PM
Last Updated : 31 May 2023 02:52 PM

“வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான் எப்போதும் என் விருப்பம்” - நடிகை சுனைனா

கோவை: “எனக்கு எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். இதை நான் முதலில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பலரும் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்” என நடிகை சுனைனா தெரிவித்துள்ளார்.

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை சுனைனா, “சிறுவயதிலேயே நான் நிறைய மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். இதை நான் முதலில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பலரும் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

‘நீர்ப்பறவை’, ‘வம்சம்’, ‘சில்லுக்கருப்பட்டி’ மற்றும் சில வெப் சீரிஸ்கள் என எதை தேர்வு செய்தாலும் கதை வித்தியாசமாக இருக்க வேண்டும், அதேசமயம் மக்களுக்கு பிடித்ததாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.

ஒரு சாதாரண பெண் எப்படி அசாதாரணமாக பெண்ணாக மாறுகிறாள், கடினமான சூழல்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் ‘ரெஜினா’ படத்தின் கதை. அந்த வகையில் ‘ரெஜினா’ முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் அவ்வப்போது சில வித்தியாசமான நிகழ்வுகள், வித்தியாசமான மனிதர்களை நாம் பார்க்க முடியும். இயக்குனருடன் இந்த கதை பற்றி விவாதிக்கும்போது கூட, இதுபோன்று நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று கேட்டேன்.

மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத்தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் உருவாகியுள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x