

கேன்ஸ் 2023 சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் மூலம் தமிழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் இயக்குநராக கால் பதிக்கிறார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அட்லீ கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவி ப்ரியாவும் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சிவப்பு கம்பள விரிப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ள அட்லீ தம்பதியினர் கலந்துகொள்ளும் முதல் கேன்ஸ் திரைப்படவிழா இதுவாகும்.
இவர்களை தவிர்த்து, அனுராக் காஷ்யப், ஐஸ்வர்யா ராய், சாரா அலி கான், அதிதி ராவ் ஹைதாரி, சன்னி லியோன், ஊர்வசி ரவுடேலா மற்றும் மிருனால் தாக்கூர், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த மே 16-ம் தேதி தொடங்கிய இந்த விழா மே 27-ம் தேதியான நாளையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.