சரத்பாபுவின் இறுதிச் சடங்கில் கமல் கலந்து கொள்ளாதது ஏன்?- சுஹாசினி விளக்கம்

சரத்பாபுவின் இறுதிச் சடங்கில் கமல் கலந்து கொள்ளாதது ஏன்?- சுஹாசினி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: மூத்த தமிழ் நடிகர்களில் ஒருவரான சரத்பாபுவின் இறுதிச் சடங்கில் அவரது நீண்டகால நண்பரான நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளாதது குறித்து நடிகை சுஹாசினி விளக்கமளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு (71), உடல்நலக்குறைவால் கடந்த 22ஆம் தேதி காலமானார். செப்ஸிஸ் எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு, முதலில் சென்னையிலும் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இம்மாத தொடக்கத்தில் இவரது உடல்நிலை மோசம் அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று திங்கள் அன்று பிற்பகல் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதும், சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சரத்பாபுவின் இறுதிச் சடங்கில் அவரது நீண்டகால நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து சரத்பாபுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நடிகையும் கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான சுஹாசினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள சுஹாசினி, கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்துக்கான மேக்கப்பில் இருப்பதால் அதனுடன் அவரால் வெளியே வருவது கடினம் என்றும் கூறினார்.

எனினும் சரத்பாபு குடும்பத்தினரை கமல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துவிட்டதாகவும், மேலும் நீண்டகாலமாக சரத்பாபுவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து விஷயங்களை கமல் தொடர்ந்து செய்து வந்ததாகவும் சுஹாசினி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in