

உலகளவில் 'ஸ்பைடர்' படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா, பரத், ரகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஸ்பைடர்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதால் வசூல் பாதிக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால், இப்படம் முதல் நாளில் 51 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தற்போது, உலகளில் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் மொத்த வசூல் 102.6 கோடி ரூபாயும், தயாரிப்பாளருக்கு பங்குத் தொகையாக 61.8 கோடி ரூபாயும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
'ஸ்பைடர்' வெளியானதைத் தொடர்ந்து, தற்போது விஜய் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.