Published : 11 Oct 2017 05:59 AM
Last Updated : 11 Oct 2017 05:59 AM

வேலுநாச்சியார் வரலாற்றை திரைப்படமாக எடுக்கிறார் வைகோ: முதல்முறையாக கதை வசனமும் எழுதுகிறார்

‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடகம் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கண்ணகி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இத்திரைப்படத்துக்கு முதல் முறையாக கதை - வசனம் எழுதுகிறார் வைகோ.

18-ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 16 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். ஜான்சி ராணியின் வீரத்தை மெச்சிய வெள்ளையர்கள், வேலுநாச்சியாரின் வீரத்தை முழுமையாகச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.

திருள்ளுவரின் திருவுருவத்தை வரைந்த கே.கே.வேணுகோபால் சர்மாவின் புதல்வர் வே.ஸ்ரீராம் சர்மா. இவர், மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் வரலாற்றை ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ எனும் நாட்டிய நாடகமாக கடந்த 2011-ல் வடிவமைத்தார். இதை அரங்கேற்றும் வாய்ப்புக்காக காத்திருந்தபோது, தனது செலவில் நாட்டிய நாடகத்தை தயாரித்து அரங்கேற்ற முன்வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதையடுத்து, கடந்த 2011-ல் சென்னை நாரதகான சபாவில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதுவரை, தமிழகத்தில் 3 பல்கலைக்கழகங்கள் உட்பட 12 மேடைகளில் அரங்கேற்றம் கண்டிருக்கிறது இந்த நாடகம்.

கடந்த 9-ம் தேதி சென்னை நாரதகான சபாவில் மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

60 கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தும் இந்த நாடகத்தில், வேலுநாச்சியாராக வரும் ஸ்ரீராம் சர்மாவின் துணைவியாரும் பரதநாட்டிய குருவுமான மணிமேகலை சர்மா, தனது நடிப்பில் நாச்சியாரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இம்முறை விஷால், நாசர், விஜயகுமார், பார்த்திபன், விவேக், தம்பிராமையா, பொன்வண்ணன், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரையும் நாடகம் பார்க்க பிரத்யேகமாக அழைத்திருந்த வைகோ, நிகழ்ச்சியின் நிறைவாக, ‘வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை கண்ணகி ஃபிலிம்ஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்கிறது. அதற்கு திரைத்துறையினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. மீட்டெடுக்கப்பட்ட நம் வீர வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்வதற்காகத்தான் இம்முயற்சியில் இறங்கியிருக்கிறோம்’ என்றார்.

ஸ்ரீராம் சர்மா ஸ்ரீராம் சர்மா right

கதை - வசனம் வைகோ

நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மாதான் திரைப்படத்தையும் இயக்குகிறார். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய அவர், ‘

வேலுநாச்சியார் வரலாறை நீங்களே திரைப்படமாக எடுங்கள்’ என்று வைகோ ஐயா சொன்னபோது கண்கலங்கிப் போனேன். அப்படியானால், நீங்கள்தான் கதை வசனம் எழுத வேண்டும் என்றேன். தொடர்ந்து வற்புறுத்தி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளேன். 2018-ல் திரைக்கு வரவுள்ள வேலுநாச்சியார் திரைக்காவியம் நிச்சயம் அனைவரையும் பேசவைக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x