

சென்னை: மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே 23) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்கள் இருவரும் திரையிலும், நிஜ வாழ்விலும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன் , முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை அவரது உடல் ஹைதராபாத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கே திரைப் பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல் பிற்பகலில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “நான் நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே சரத்பாபுவை எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மிகவும் அருமையான மனிதர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் கோபமாக இருந்து நான் பார்த்தது இல்லை. அவருடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ஹிட். முள்ளும் மலரும் படத்தில் தொடங்கி வேலைக்காரன், முத்து, அண்ணாமலை எல்லாமே ஹிட் தான்.
என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர். ‘சிகரெட்ட நிறுத்து. உடம்ப கெடுத்துக் கொள்ள வேண்டாம். ரொம்ப நாள் வாழனும்’ என என்னிடம் சொல்வார். நான் சிகரெட் பிடித்தாலும் அதை தூக்கிப் போட்டு விடுவார். அதனால் அவர் முன்பு அதை நான் செய்யவே மாட்டேன். ரொம்ப நல்ல மனிதர்” எனத் தெரிவித்தார்.