

இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன் இசைப் போட்டியில் பங்கேற்றாரா? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
இலங்கையில் இருந்து தப்பித்து உடமைகளும் உரிமைகளுமின்றி தமிழகத்தில் தஞ்சமடையும் அகதிகள் எதிர்கொள்ளும் துயரங்களைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். காவல்துறை மற்றும் அரசின் கண்காணிப்பில் இருக்கும் அகதிகளின் இயல்பான நகர்வும் அடிப்படை உரிமைகளும் கூட மறுக்கப்படும் அவல நிலையையும் அவர்களின் அன்றாடப்பாடுகளையும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. தங்களுக்கான குடியுரிமை அங்கீகாரத்துக்காக நெடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.
அதே நேரம் மெதுவாக நகரும் காட்சிகளும் பொருத்தமில்லாத கிளைக்கதைகளும் திரைக்கதையைத் தடுமாற வைத்துள்ளன. புனிதனுக்கும் மெடில்டாவுக்குமான காதல், கதை நகர்வுக்குச் சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அக்காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர்கின்றன. காவல்துறை அதிகாரியின் துரத்தல்கள் பரபரப்பு கூட்டினாலும் இறுதியில் முடித்துவைக்கப்பட்ட விதம் சினிமாத்தனமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் புனிதன் தன் முன்கதையைச் சொல்லும் காட்சிகளும் கனகவள்ளியும் அவனும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. பிறகு திரைக்கதை மீண்டும் தொய்வடைந்து விடுகிறது.
இறுதிக் காட்சியில், லண்டன் இசைப் போட்டி மேடையில் அகதிகளின் அவலம், அவர்களுக்கான குடியுரிமை, எல்லைகள் கடந்த மனித நேயம் குறித்து புனிதன் பேசும் வசனங்கள் முக்கியமானவை. ஆனால் படம் முடிந்துவிட்டதாகக் கருதி பார்வையாளர்கள் கிளம்ப ஆயத்தமாகும் நிலையில் அவ்வளவு முக்கியமான கருத்துகளைச் சொல்லி இருப்பது உரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
விஜய் சேதுபதி இலங்கைத் தமிழராக அடையாளமற்ற அகதியின் மனநிலையைக் கடத்தியிருக்கிறார். கனிகா உணர்வுபூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மெடில்டாவாக மேகா ஆகாஷும் பாதிரியாராக வரும் ராஜேஷ், மறைந்த நடிகர் விவேக் இருவரும் மனதில் பதிகின்றனர். மகிழ் திருமேனி எதிர்மறை வேடத்தில் முத்திரைப் பதிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை காட்சியின் தாக்கத்தை மேம்படுத்துகிறது. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் குளுமையையும் அகதி முகாம்களின் நெருக்கடியையும் உணரவைக்கிறது.
இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்வைப் பதிவுசெய்த வகையில் முக்கியத்துவம் பெறும் இந்தப் படைப்பு திரைக்கதைக் கோளாறுகளால் உரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறுகிறது.