

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் முதல் நாளில் ரூ.7.30 கோடியை வசூலித்துள்ளதாக விஜய் ஆண்டனியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மூளை மாற்று சிகிச்சை மற்றும் வர்க்க பேதம் நிலைகள், அண்ணன் - தங்கை பாசம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் இப்படம் நேற்று (மே 19) திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளான நேற்று தமிழில் மட்டும் ரூ.3.25 கோடியை வசூலித்துள்ளதாகவும், தெலுங்கில் 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் விஜய் ஆண்டனியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படம் தெலுங்கில், ‘பிச்சகாடு 2’ (Bichagadu 2) என் பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் ரூ.7.30 கோடி வரை வசூலித்துள்ளதுடன் அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் எண்ணிக்கை கூடலாம் என கணிக்கப்படுகிறது.
விமர்சனத்தை வாசிக்க: பிச்சைக்காரன் 2 Review: ஆரம்பம் எல்லாம் அதகளம்தான். ஆனா..?