“அது ஒரு தனி உலகம்... விக்ரம் நிறைய உதவினார்” - ‘தங்கலான்’ குறித்து மாளவிகா மோகனன்

“அது ஒரு தனி உலகம்... விக்ரம் நிறைய உதவினார்” - ‘தங்கலான்’ குறித்து மாளவிகா மோகனன்
Updated on
1 min read

ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘தங்கலான்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், விக்ரமுக்கு ஏற்பட்ட காயத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் ‘#Askmalavika’ ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன் தங்கலான் குறித்தும் பேசியுள்ளார்.

இது தொடர்பாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ‘தங்கலான்’ படத்தின் பயணத்தை திரும்பி பார்க்கிறேன். விக்ரம் இல்லாமல் இந்த கடினமான பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும், ஒவ்வொரு தருணத்திலும் விக்ரம் எனக்கு உதவியாக இருந்தார். சுயநலமில்லாதவர். அவரைச் சுற்றியிருப்பவர்கள் மீது அக்கறை கொண்டவர். சக நடிகர்களை ஊக்குவிக்கும் அவர் தன்னை சுற்றியிருப்பவர்களை கலகலப்பாக வைத்துக்கொள்வார். அவரது நகைச்சுவை உணர்வைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ‘வேற லெவல்’.

‘தங்கலான்’ திரைப்படம் அழகாக உருவாகி வருகிறது. தனித்துவமான உலகை அது உருவாக்கும். இந்த மாதம் எங்களின் கடைசி ஷெட்யூலை படமாக்க இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர் குணமடைந்த பிறகு விரைவில் மீண்டும் தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in