

சென்னை: ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகாவை விட நான் பொறுத்தமாக இருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த விளக்கத்துக்கு நடிகை ராஷ்மிகா எதிர்வினையாற்றியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதனையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதில், தான் உதாரணத்துக்காக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாவது, தனக்கு ராஷ்மிகா மீதும் அவரது நடிப்பின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த அறிக்கைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளதாவது:
“ஹாய் அன்பே, இப்போதுதான் இதனை பார்த்தேன். நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை கூறினீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. நம்மைப் பற்றி நாம் விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை உங்கள் ‘ஃபர்ஹானா’ படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்”
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.