

தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. வேல்ராஜ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
"'வேலையில்லா பட்டதாரி' படம் பார்த்தேன், ரசித்தேன். தனுஷின் நச் நடிப்பு, அனிருத்தின் முறுக் மியூசிக். வேல்ராஜிற்கு வாழ்த்துகள். நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு முழுதிருப்தியான படம்" என்று இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பல்வேறு தரப்பினரின் வாழ்த்தையும், வசூலையும் குவித்து வரும் நிலையில், இப்படத்திற்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் பெருகி வருகிறது. தமிழ்நாடு புகையிலை தடுப்பு கூட்டமைப்பு மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகம் உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத், ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலை பாடியது நினைவுகூரத்தக்கது.