பரபர ஆக்‌ஷன், ஆழமான வசனங்கள் - வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ ட்ரெய்லர் எப்படி?

பரபர ஆக்‌ஷன், ஆழமான வசனங்கள் - வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

தொடர்ந்து வெவ்வேறு ஜானரில் களமிறங்கும் வெங்கட் பிரபு தற்போது கையில் எடுத்திருப்பது பரபர போலீஸ் கதை. ‘மன்மதலீலை’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ‘கஸ்டடி’ என தலைப்படப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (மே 05) வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: போலீஸ் வேலைன்னா என்னன்னே தெரியாம ஏதோ ஒரு கோட்டால உள்ள வந்துட வேண்டியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். உயரதிகாரிகளிடம் சதா திட்டு சாதாரண கான்ஸ்டபிளாக காட்டப்படுகிறார் நாயகன் நாக சைதன்யா. நாயகியாக கீர்த்தி ஷெட்டி. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தன் குடும்பத்திடமிருந்து தன்னை மீட்டுச் செல்லுமாறு நாயகனிடம் கோரிக்கை வைக்கிறார்.

எல்லா வெங்கட் பிரபு படங்களிலும் தவறாமல் இடம்பெறும் அவரது தம்பி பிரேம்ஜி இதிலும் இருக்கிறார். முதலமைச்சராக பிரியாமணி, வில்லனாக அரவிந்த்சாமி, காவல்துறை உயரதிகாரியாக சரத்குமார் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இளையராஜா மற்றும் யுவனின் இசை ட்ரெய்லருக்கு வலு சேர்க்கிறது. ‘வில்லனை சாகவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஹீரோ’ என்பதுதான் படத்தின் அடிநாதம் என பல பேட்டிகளில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். ‘உன்னை கோர்ட்டில் கொண்டு போய் சேர்ப்பேன் இல்லன்னா ட்ரை பண்ணி சாவேன்’ என்று வில்லனிடம் நாயகன் சொல்லும் வசனம் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் எல்லா காட்சிகளும் தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்தனியாக எடுக்கப்பட்டவை என்பதால், பெரும்பாலான பைலிங்குவல் படங்களில் வரும் லிப் சிங்க் பிரச்சினை ட்ரெய்லரில் தெரியவில்லை என்பது ஆறுதல்.

ட்ரெய்லர் முழுக்க தூவப்பட்டிருக்கும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளின் துணுக்குகள் படம் எதனடிப்படையில் இருக்கப் போகிறது என்பதை அடித்து கூறுகின்றன. ‘உண்மை ஜெயிக்க லேட் ஆகும், ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்’ என முடிவில் வரும் வசனம் கவனம் ஈர்க்கிறது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in