

சென்னைதிரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர் மனோபாலா. சமீபத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பார்த்துவிட்டு அவர் பாராட்டி பேசியது நெஞ்சில் நிழலாடுகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தேர்தல் காலங்களில் அதிமுக நட்சத்திர பேச்சாளராக மனோபாலாவின் பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மனோபாலா காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், திரைப்படத் துறையினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: தமிழ்நாடு அரசு திரைப்படம், சின்னத்திரை விருதுகள் தேர்வுக் குழு உறுப்பினராக மனோபாலா இருந்துள்ளார். 2011-ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டதை நினைவுகூர்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக மிக சிறப்பாக திரைத் துறையில் பங்காற்றியவர். 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழ் திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் ஒருவராக திகழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பு.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மனோபாலா இயக்கத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பல்வேறு திரைப்படங்களை இயக்கியும், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்தும், தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த்: இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
இயக்குநர் பாரதிராஜா: எனது உதவியாளர்களில் மனோபாலா ஒரு சிறப்பு வாய்ந்த கலைஞன். சிறந்த ஓவியன். அவன் இயக்கிய படங்கள் மென்மையாக இருக்கும். குடும்ப, காதல் கதைகளை சிறப்பாக இயக்குவான். ரொம்ப மென்மையானவன். அவன் மறைவு தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் சத்யராஜ், ராதிகா, டி.ராஜேந்தர், கார்த்தி, சூரி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.