ஆவணப் படமாக உருவாகும் அஜித்தின் பைக் டூர் 

ஆவணப் படமாக உருவாகும் அஜித்தின் பைக் டூர் 

Published on

நடிகர் அஜித்குமாரின் உலக சுற்றுலா ஆவணப் படமாக உருவாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் சினிமா தவிர்த்து, கார் பந்தயம், பைக் டூர், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு நேரம் போக அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வது அஜித்தின் வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘துணிவு’ படப்பிடிப்பின் இடையே, ஐரோப்பாவில் தன் நண்பர்களுடன் பைக் டூர் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

‘துணிவு’ படப்பிடிப்புக்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்ல இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது அவர் தனது பைக் டூரை மீண்டும் தொடங்கியிருக்கிறார். புனே, ஹைதராபாத், சிம்லா மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளை கடந்து தற்போது நேபாளத்தில் இருக்கிறார்.

அஜித்தின் இந்த உலக சுற்றுலாவை ஆவணப் படுத்துவதற்காக ஒளிப்பதிவாளர் நீர்வ ஷாவும் அஜித்துடன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பைக் டூரை ஆவணப்படமாக எடுக்க அஜித் விரும்பியதாகவும், முதல் சுற்றுலாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அஜித்துக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த ஆவணப்படம் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படுமா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in