“சினிமாவைப் புரிந்துகொள்ள ஓடிடி தளங்கள் உதவிபுரிந்தன” - இயக்குநர் வெற்றிமாறன்

“சினிமாவைப் புரிந்துகொள்ள ஓடிடி தளங்கள் உதவிபுரிந்தன” - இயக்குநர் வெற்றிமாறன்
Updated on
1 min read

“வெகுஜன சினிமா மூலமாக ஆஸ்கர் வாங்குவதுதான் தற்போது நிகழ்ந்திருக்கும் வளர்ச்சியாக கருதுகிறேன். வெகுஜன படங்கள் அங்கீகாரம் பெற்றுவருகின்றன” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

‘தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ (Dakshin Media & Entertainment Summit 2023) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “கலைக்கு மொழியில்லை; எல்லையில்லை என சொல்வார்கள். ஆனால் கலைக்கு மொழியுண்டு. கலாச்சாரம் உண்டு. ஆனால் கலையை நுகர்பவர்களுக்கு அந்த மொழியில்லை. எல்லையில்லை. அது தான் கரோனோவில் நடந்தது.

வீட்டில் இருந்தபோது என்ன செய்வதென்று தெரியாத நாம் ஓடிடி தளங்களில் அனைத்து வகையான படங்களை பார்க்க ஆரம்பித்தோம். அது சினிமாவை புரிந்துகொள்ள உதவி புரிந்தது. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. லாக்டவுனுக்குப் பிறகு படத்தை பார்க்கும் விதமே மாறியிருக்கிறது. திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பான் இந்தியா சினிமா உருவாகியுள்ளது. பல்வேறு திரைத் துறைகளிலிருந்து நடிகர்கள் ஒரு படத்திற்காக ஒன்றுகூடுகிறார்கள்.

ஒரு பிராந்திய மண்ணைச் சேர்ந்த படம் சர்வதேச அளவில் அடையாளப்படுகிறது. நம்முடைய கதைகள் படமாக்கப்படுகின்றன. ஆனால் அதிலிருக்கும் உணர்வு எல்லையை கடந்து எல்லோருக்குமான உணர்வாக மாறியிருக்கிறது. சமீபகாலமாக மண்ணைத் தாண்டியிருக்கும் எல்லைகள் உடைந்திருப்பதாக கருதுகிறேன். ஆஸ்கர் வாங்கியதைத் தாண்டி, வெகுஜன சினிமா மூலமாக ஆஸ்கர் வாங்குவதுதான் தற்போது நிகழ்ந்திருக்கும் வளர்ச்சியாக கருதுகிறேன். வெகுஜன படங்கள் அங்கீகாரம் பெறுகின்றன.

இந்திய திரைத் துறையின் சந்தையில் தென்னிந்திய திரைப்படங்கள் வணிகத்தில் முக்கிய பங்குவகிக்கிறது. அதேபோல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் நாம் சொல்லும் கதைகள் நம் மண்ணைச் சார்ந்த கதைகளாக இருக்கின்றன. நாம் நம்முடைய அடையாளங்களுடன் தனித்துவத்துடன், பெருமையுடன் படங்களை இயக்குவது தான் இந்த வீச்சுக்கு காரணம் என நினைக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in