

தமிழகத்தைக் காக்க கமலுக்கு ஒரு நாள் முதல்வர் வாய்ப்பளிக்க வேண்டும் என அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தனது சமூகவலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்து வருபவர் கமல். தற்போது நிலவும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பாகவும் கமல் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். திரையுலகினர் பலரும் கமலின் கருத்துகளுக்கு தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ""'முதல்வன்' படம் போல் வாய்ப்பு கிடைத்தால், அதாவது ஒருநாள் முதல்வராக ஒருவரை நியமிக்க முடியுமென்றால், கமலஹாசனுக்கு அப்பதவியை ஒருநாளைக்கு தமிழகத்தைக் காக்க வாய்ப்பளிக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒருநாள் போதும். அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது மட்டும் நடந்தால் கமல் தனது புதிய சிந்தனைகளால் அரசை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வார். இது என்னுடைய தனிப்பட்ட ஆசை. நான் தவறாக ஏதும் கூறியிருந்தால் இந்தக் குழந்தையை மன்னியுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
'ப்ரேமம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளில் அல்போன்ஸ் புத்திரன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.