‘ருத்ரன்’ படத்தை ‘மாஸ்’ படமாக்கிய மக்களுக்கு நன்றி - ‘காஞ்சனா’ கதை எழுதும் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி
“ருத்ரன் படத்தை ‘மாஸ்’ படமாக்கிய மக்களுக்கு நன்றி. ‘காஞ்சனா’ படத்தின் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்; ‘சந்திரமுகி 2’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகலாம்” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், “ருத்ரன் கதை கேட்டதும் இதில் ஒரு தாய் சென்டிமென்ட் இருந்தது. எனக்கு அம்மா என்றால் மிகவும் பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியும்; கோயில் கூட கட்டிருக்கிறேன். அதனால் இந்தப் படத்தை தேர்வு செய்தேன். இதில் ஆக்ஷன், டான்ஸ் எல்லாம் கலவையாக இருக்கும். குடும்பங்களுக்கு இப்படம் பிடிக்கும் என நினைத்தோம். அதேபோல குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து படத்தைப் பார்க்கிறார்கள். பெரியவர்கள்போன் செய்து படம் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்தப் படத்தை ‘மாஸ்’ படமாக்கி முதல் நாள் வசூலை நன்றாக கொடுத்த மக்களுக்கு நன்றி. ஒரு சில தாய்மார்கள் என்னிடம் போன் செய்து ‘படத்த பார்த்துட்டு என் பையன் என்கூட பேசுறான்பா’ என உருக்கமாக கூறினர். மக்களிடம் படம் நன்றாக சென்று சேர்ந்துள்ளது. நான் கதை தேர்வு செய்வதெல்லாம் குடும்ப படங்களை அடிப்படையாக கொண்டு தான் தேர்வு செய்கிறேன். ‘காஞ்சனா’ என எல்லாமே குடும்பக் கதைகள் தான்” என்றார்.
மேலும் படங்களின் மீதான விமர்சனங்கள் குறித்து கேட்டதற்கு, “விமர்சனங்கள் தனி நபரை தாக்கும் வகையில் இருக்கக் கூடாது. படத்தை சிரமப்பட்டு எடுக்கிறார்கள். எல்லோரும் நல்ல படத்தை எடுக்க வேண்டும் தான் நினைக்கிறார்கள். அதில், எதாவது மிஸ்ஸானால் அது அவர்களின் தவறில்லை. தெரியாமல் செய்வது. 4 வருடத்திற்கு முன்பு இந்த ஸ்கிரிப்படை தேர்வு செய்தோம். கரோனா வந்தது. ட்ரெண்டே மாறிவிட்டது. அதுக்காக நாம் தவறு செய்துவிட்டோம் என ஆகிவிடாதல்லவா... ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா 2’ படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும். ‘காஞ்சனா’ கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ந்து எனது படங்கள் வெளியாகும். ‘சந்திரமுகி 2’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என நினைக்கிறேன்” என்றார்.
