

அரசியலுக்கு வரத் தயார். தேவைப்பட்டால் முதல்வராகவும் தயாராக இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த சலசலப்புகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசம் குறித்தும் முதல்வர் பதவி குறித்தும் தெளிவுபட விளக்கியிருக்கிறார்.
வியாழக்கிழமை பின்னிரவு இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "யாராவது ஒருவர் அரசியல் குல்லாவை அணிந்தே தீர வேண்டும். ஆனால், அந்தக் குல்லா முட்களால் நிரம்பியிருக்கும். புதைகுழியாக இருக்கும் ஓரிடத்தை மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்ற வேண்டுமெனில் அவ்விடத்தை யாராவது ஒருவர் தூய்மைப்படுத்தியே ஆகவேண்டும்.
எனக்கு அதிகார வேட்கையில்லை. ஆனால், அதிகாரத்தால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றால் அத்தகைய அதிகாரத்துக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். தமிழகத்தை மிகப் பரிதாபமான நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் நான் அரசியலுக்கு வரத் தயார்; தேவைப்பட்டால் முதல்வராகவும் தயார்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ், சோம்நாத் பாரதி ஆகியோர் உடன் இருந்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால் "ஊழலுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் வெகு சிலரில் கமல்ஹாசனும் ஒருவர். வெளியே நின்றுகொண்டு குற்றஞ்சாட்டி சபித்துக் கொண்டிருக்காமல் துணிச்சலாக அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார்.
தேசம் ஓர் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டிருக்கும்போது ஊழல், மதவாதத்துக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இந்தச் சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருந்தது. நாங்கள் நாட்டு நிலவரம் குறித்தும் தமிழக நிலவரம் குறித்தும் விரிவாக பேசினோம்" என்றார்.