

த
மிழில் ‘யானைமேல் குதிரை சவாரி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை அர்ச்சனா சிங். தற்போது ‘மவுனிகா’ என்ற பேய் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
உங்களைப் பற்றி..
பிறந்தது, வளர்ந்தது பெங்களூருவில். எம்பிஏ படித்துள்ளேன். ஐ.டி. நிறுவனம், விமான பணிப்பெண், விளம்பரப் படங்கள், மாடலிங் என வாழ்க்கை நகர்ந்தபோது சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஒரு சோதனை முயற்சியாக நடிக்க வந்தேன். அதுவே தொழிலாகிவிட்டது. 2015-ல் வந்த ‘மாமு டீ அங்காடி’ என்ற கன்னடப் படம்தான் முதல் படம். தமிழில் ‘யானைமேல் குதிரை சவாரி’ படம் மூலம் அறிமுகமானேன். தமிழ், மலையாளத்தில் ‘கன்னிசாமி’ என்ற பக்தி படத்தில் நடித்துள்ளேன். அமுதவாணன் இயக்கத்தில் ‘வெருளி’ படத்தில் நடித்தேன். அதில், மர்மமான சாலை விபத்துகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பத்திரிகை நிருபராக நடித்தது சிறந்த அனுபவம்.
இதுவரை மொத்தம் 6 படங்களில் நடித்துள்ளேன். ‘ட்யூப் லைட்’, ‘கவுடுரு ஹோட்டல்’ ஆகிய படங்கள் விரைவில் வெளிவருகின்றன. ‘சித்தர் கயிலாயம்’ என்ற தமிழ் படம், முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிற்கிறது.
தமிழில் உங்கள் அறிமுகப் படத்திலேயே, மொட்டை ராஜேந்திரனுடன் நடித்தது எப்படி?
‘யானைமேல் குதிரை சவாரி’ படத்தில் பிரதான ஹீரோ என்று யாரும் கிடையாது. அந்தப் படத்தில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். கதாபாத்திரம் வலுவாக இருந்தால், நாயகனாக நடிப்பது யார் என்று பார்க்க அவசியம் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால், யாருடனும் நடிப்பேன். எல்லா நடிகர்களையும் பிடிக்கும். கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அஜீத் சாரோடு நடிக்க விரும்புகிறேன். ஹிந்தி, தமிழ் படங்களில் ஸ்ரீதேவி நடித்தாரே, அதுபோல சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
தற்போது, ‘மவுனிகா’ என்ற தமிழ் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
சிறு பட்ஜெட் படங்களில்தான் நடித்துள்ளேன். பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது. சாதாரண நடிகைகள் இங்கு தாக்குப்பிடிப்பது சிரமம்.
தொலைக்காட்சியில் இதுபோன்ற நிர்ப்பந்தங்கள் குறைவு என்பதால், அதில் கவனம் செலுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.