Published : 12 Apr 2023 07:47 PM
Last Updated : 12 Apr 2023 07:47 PM

ஜூனியர் என்டிஆர் உடன் இணைவது ஏன்? - வெற்றிமாறன் விளக்கம்

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து விரைவில் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், ‘ஸ்டார் வேல்யூவுக்காக படம் பண்ணவில்லை’ எனவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யபட உள்ளது. வரும் 15-ம் தேதி படம் தெலுங்கில் வெளியாகிறது.

‘விடுதலை பாகம் 1’ பட தெலுங்கு வெர்ஷன் சிறப்புக் காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது ஜூனியர் என்டிஆருடன் இணைய உள்ளது குறித்து வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆடுகளம் படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனைச் சந்திப்பதற்காக நான் இங்கு வந்தேன். அதன்பிறகு அவர் என்னைச் சென்னையில் சந்தித்தார். தமிழ் திரையுலகில் நுழைய அவர் ஆர்வமாக இருந்தார்; அதனால், தனக்கான கதை ஏதும் நீங்கள் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்.

அப்போது ‘வடசென்னை’ படத்தில், அவருக்காக வைத்திருந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் குறித்து அவரிடம் விளக்கினேன். ஆனால், ஒருசில காரணங்களால் அது சரியாக அமையவில்லை. அதனால் மீண்டும் ‘வடசென்னை’ கதையை எழுதி எடுத்தேன். தற்போது உள்ள ‘வட சென்னை’ படம், அல்லு அர்ஜுனிடம் சொன்ன கதையல்ல. முற்றிலும் வேறுபட்டு எடுக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். ஆனால் அதுவும் ஒத்துவரவில்லை” என்றார்.

மேலும், “அசுரன் படத்திற்குப் பிறகு, ஊரடங்கு முடிந்த சமயத்தில் ஜூனியர் என்டிஆரைச் சந்தித்துப் பேசினேன். படம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நிச்சயம் ஒரு படம் சேர்ந்து செய்வோம். ஆனால், அந்தப் படம் திரைக்கு வர காலதாமதம் ஆகும். ஏனெனில், திரைப்படங்களை எடுக்க அதிக நேரங்களை எடுத்துக்கொள்கிறேன். ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்குச் செல்ல எனக்கு நிறைய நேரம் எடுக்கும். அதுதான் பிரச்சனையே” என்று அவர் கூறினார்.

அத்துடன், “ஸ்டார் வேல்யூக்காகவோ, காம்பினேஷனுக்காகவோ படம் செய்ய மாட்டேன். கதைக்காகத்தான் படம் பண்ணுவேன். நான் வைத்துள்ள ஒரு கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் அதுசம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உங்களின் முதல் தெலுங்கு படம் அல்லு அர்ஜுனுடனா அல்லது ஜூனியர் என்.டி.ஆருடனா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, காலம் பதில் சொல்லும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படங்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநரான வெற்றிமாறன், விஜய் மற்றும் கமலுக்காக கதை சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x